லாம் -படைத்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்;அன்று தொட்டு- படைப்புக் காலந் தொட்டு;இன்று காறும் -இன்று வரையிலும்;புரிந்த பாக்கியம் எல்லாம் -செய்த நல்வினைகள் எல்லாம்;குவிந்து -திரண்டு; இருபடிவம் ஆகி -இரண்டு திருவுருவமாய்;மேக்கு உயர் -மேலே உயர்ந்த;தடந்தோள் பெற்று- பெரிய தோள்களைப் பெற்று;வீரர் ஆய் விளைந்த -இவ்வீரர்களாய்த் தோன்றின;என்பான் -என்று எண்ணுபவன் ஆவான். படைப்புக் காலந் தொட்டு இன்று வரையிலும் உலகம் செய்த பாக்கியமெல்லாம் சேர்ந்து இருவடிவமாகிப் பெருந்தோளும் பெற்று இராமலக்குவராய்த் தோன்றினர் எனச் சுக்கிரீவன் கருதினான். 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349), என்றும் வீர, நின்குல மைந்தனை, வேதியர் முதலோர், யாரும் 'யாம் செய்த நல்லறப்பயன்' என இருப்பார் (1351) என்னும் வசிட்டர் கூறுவது காண்க. சுக்கிரீவன் வேண்டுவது வாலியைத் தொலைக்கும் வீரத்தையேயாதலால் அழகு, அறிவு முதலியன பற்றிக் கூறாது 'வீரராய் விளைந்த' என்றான். நொடிவு - சொல்லுதல் என்றுமாம். இது தொழிற்பெயர். 18 | 3804. | தேறினன்- 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே, மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ; ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது' அன்றே! |
அமரர்க்கு எல்லாம் -தேவர்களுக்கு எல்லாம்;தேவர் ஆம் தேவர்-கடவுளாகிய முதற்கடவுளே (திருமாலே);மாறி- தம் உருவம் மாறி; இப்பிறப்பில் -இந்தப் பிறவியை எடுத்து;மானிடர் ஆகி வந்தார் - மானிடராக வந்துள்ளார்;ஆறுகொள் சடிலத்தானும் - (அதனால்) கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும்;அயனும் - நான்முகனும்; என்று இவர்கள் ஆதி -என்று இவர்கள் முதலாக;வேறு உள குழுவை எல்லாம்- வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம்;மானுடம் வென்றது -மனித குலம் வென்றுவிட்டது;அன்றே -அல்லவா? தேறினன்-என்று தெளிந்தான். தேவர்களுக்குள் முதல்வனான திருமாலே மானிடனாகப் பிறந்துவிட்டதால் பிரமன் முதலான தேவர்கூட்டத்தை மானுடன் வென்றதாகக் கூறினான். திருமால் இராமனாகவும் ஆதிசேடன் இலக்குவனாகவும் பிறந்தார் என்பதைத் 'திரு அவதாரப்படலத்தில் காணலாம். அமரர்க்கெல்லாம் தேவராம் தேவர் திருமால் என்பதை 'முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணம்' (முதல் திருவந்தாதி 15) என்ற பொய்கையாழ்வார் பாசுரம் உணர்த்தும். இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்பது கருத்தாகும். பெருமானைக் கண்ட அளவிலேயே உணர்வின் |