நோக்கி -இராானைப் பார்த்து;செல்வ - ''எல்லாச் செல்வமும் உடையவனே! உலகுக்கு எல்லாம் -உலகம் அனைத்திற்கும்;நாயகம் என்னல் ஆம் -தலைமையான பொருள் என்று சொல்லுதற்கு ஏற்ற;நலம் மிக்கோயை -நல்ல குணங்களை உடையவனான;நின்னை -உன்னை; மேயினென் -யான் வந்து சேர்ந்தேன்;தீவினை தீய நோற்றார்- (எனவே) தீவினை ஒழியுமாறு தவம் செய்தவர்கள்;என்னின் யார்? -என்னைக் காட்டிலும் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்);விதியே நல்கின் - ஊழ்வினையே இவ்வாறு கூட்டி அருளுமாயின்;மேவல் ஆகாது என் - அடைய முடியாதது யாதுளது? (ஒன்றுமில்லை). சுக்கிரீவன் இராமனை அடைந்தது, தான் முன் பிறவியில் செய்த நல்வினையாலும், ஊழின் செயலாலுமாம் எனக் கூறினான். தீவினை நீங்கத் தவம் செய்தார்க்கு அன்றி இராமனை அடைய முடியாது என்பதால் ''தீவினை தீய நோற்றார் என்னின் யார்?'' என்றான். நல்லூழ் தனக்கு அப்பேற்றை நல்கியது எனக் கூறுவான். அதைப் பொதுப் பொருளாக்கி 'விதியே நல்கின் மேவல் ஆகாது என்?' என்றான். இது வேற்றுமைப் பொருள் வைப்பு அணி. 'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே' (3681) என்ற அடியை ஒப்பு நோக்குக. 'ஆகாதது என்ற சொல் செய்யுள் நோக்கி ஆகாது என நின்றது. 23 | 3809. | 'மைஅறு தவத்தின் வந்த சவரி, இம் மலையில் நீ வந்து எய்தினை இருந்த தன்மை, இயம்பினள்; யாங்கள் உற்ற கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்; ஐய! நின் தீரும்' என்ன, அரிக்குலத்து அரசன் சொல்வான்; |
ஐய - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) ஐயனே! மை அறு தவத் தின்வந்த -குற்றமற்ற தவமுடையவளாய் வந்த;சவரி - சவரியானவள்; இம்மலையில் நீ வந்து- இந்த ருசியமுக மலையில் நீ வந்து;எய்தினை இருந்த தன்மை- பொருந்தி இருந்த நிலையை;இயம்பினள் -சொன்னாள்; யாங்கள் உற்ற -நாங்கள் அடைந்துள்ள;கையறு துயரம் -செயலற்று வருந்தும் பெருந்துன்பத்தை;நின்னால் கடப்பது கருதி - உன்னால் நீக்குவதுகருதி;வந்தேம் - இங்கு வந்தோம்;நின் தீரும் -அத்துன்பம் உன்னாலேயேதீர்வதாகும்';என்ன -என்று கூற (அதைக்கேட்ட); அரிக்குலத்து அரசன் -குரங்கினத்திற்கு அரசனாகிய சுக்கிரீவன்; சொல்வான் -சொல்லத்தொடங்கினான். சுக்கிரீவன் இருந்த மலையை அறிந்தது எவ்வாறு என்பதை அறிவிக்கச் 'சவரி . . . . இயம்பினள்' என்றான் இராமன். தான் வந்த காரணத்தையும் 'கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்' என உரைத்தான். மை - குற்றம்; தவத்திற்குக் குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் இடை இடையே நிகழ்வது. 'வந்து |