எல்படர் நாகர்தம் இருக்கை -(அப்பொய்கை) ஒளி படர்ந்த நாகர்களின் இருப்பிடம்; ஈது என -இதுதான் என்று; கிற்பது - சுட்டிக்காட்டும்;ஓர் காட்சியது எனினும் -ஒரு தோற்றத்தை உடையதாயினும் (ஆழமுடையதாயினும்);கற்பகம் அனைய - கற்பகத்தரு போன்ற;அக் கவிஞர் - அந்தச் சிறந்த கவிஞர்கள்;நாட்டிய சொற் பொருளாம் என -நிலை நிறுத்திய சொற்களின் பொருள் போல;கீழ்உற- கீழ்உலகம் வரையிலும்;தோன்றல் சான்றது - காணும் தெளிவுடையது; பொய்கை நாகர் உலகம் தெரிகின்ற அளவு ஆழம் உடையதென்றார். கவிஞர்கள் கூறும் சொற்பொருள்போலத் தெளிவும் ஆழமும் பெற்றிருந்தது. (வடிவிலே தெளிவு; கருத்திலே ஆழம்). கற்பகத்தரு வேண்டுவார்க்கு வேண்டியன அளித்தல் போல உயர்ந்த கவிஞர்களும் பயில்வார் விரும்பத்தகு நலமிகு கருத்துக்களைக் கொடுக்க வல்லவர்களாதலின் 'கற்பகம் அனையர்' எனப்பட்டனர். 'அக்கவிஞர்' என்பதில் அகரச் சுட்டு, புலவர்களின் புகழை உணர்த்தும். கவிஞர்கள் இயற்றிய நூல்கள் ஆழ்ந்த பொருள் கொண்டதாயினும் பயில்வார்க்குத் தெளிவாக விளங்கவைத்தல் போலப் பொய்கை ஆழமுடையதாயினும் தெளிந்தஇயல்புடையதாயும் விளங்குகிறது; உவமை அணி. 'சான்றோர் கவியெனக்கிடந்த கோதாவரி' என்று நதிக்குச் சான்றோர் கவிதையை உவமைகூறியிருத்தலை ஆரணிய காண்டத்தும் காணலாம். (2732) 5 | 3714. | களம் நவில் அன்னமே முதல, கண் அகன் தள மலர்ப் புள் ஒலி தழங்க, இன்னது ஓர் கிளவி என்று அறிவு அருங் கிளர்ச்சித்து; ஆதலின், வள நகர்க் கூலமே போலும் மாண்பது. |
கண் அகன் -இடமகன்ற; தளமலர் -இதழ்களையுடைய தாமரை மலர்களில் இருக்கின்ற;களம் நவில் -இனிதாகக் கூவுகின்ற; அன்னமே முதல - அன்னங்கள் முதலான;புள்ளொலி - பறவைகளின் ஒலி;தழங்க- மிகுதியாக ஒலிக்க;இன்னது ஓர் கிளவி என்று - இன்ன பறவையின் ஒலி இஃது என்று;அறிவு அரும் கிளர்ச்சித்து - அறிய முடியாத எழுச்சியினை உடையது;ஆதலின் - அதனால்; வளநகர்க் கூலமே போலும்- (அப்பொய்கை) செல்வம் மிக்க பெரிய நகரங்களில் காணப்படும் கடைவீதியை ஒத்திருக்கும்; மாண்பது - சிறப்பினை உடையது. பொய்கைக்கு வளநகர்க்கூலமும், பொய்கையில் எழுந்த பறவைகளின் ஒலிக்கு நகரக்கடைத்தெருக்களில் கொள்வாரும் கொடுப்பாருமாய் எழுப்பும் ஒருங்கெழுந்த பேச்சொலியும் உவமைகளாம்; உவமை அணி. |