கொண்டவர்கள்;எனக்கும் உற்றார் - எனக்கும் நண்பராவர்;உன் கிளை - உன் உறவினர்;எனது -என் உறவினராவர்;என் காதல் சுற்றம் - என் அன்புள்ள சுற்றத்தினர்;உன் சுற்றம் -உன் சுற்றத்தினராவர்;நீ என் இன் உயிர்த்துணைவன் -நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்';என்றான் - என்றான். இராமன் சுக்கிரீவனைத் தன் உயிர் நண்பனாகக் கொண்டமையால் அவனுடைய பகைவர்களும் நண்பர்களும் சுற்றத்தினரும் தனக்கும் முறையே பகைவர், நண்பர், சுற்றத்தினர் ஆவர் எனக்கூறித் தன் நட்பின் உறுதித் தன்மையை உணர்த்தினான். 'தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்' என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான். சுக்கிரீவனின் உற்றார் நல்லவராக இருந்து, பின்னர்த் தீயராக மாறினும் அவர்களை உற்றாராகக் கொள்வதன்றி விட்டு நீங்குதல் இல்லை என இராமன் உறுதி கூறினான். ''என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்' என்று இராமன் குகனிடம் கூறியதை (1994) ஒப்பு நோக்கலாம். கிளை - உவமை ஆகுபெயர்; எனது - ஒன்றன்பால் குறிப்பு முற்று; உயிர்த் துணைவன் - உவமைத்தொகை; தீயரே - 'ஏ' தேற்றம்; எனினும் - உம்மை இழிவு சிறப்பு. 27 | 3813. | ஆர்த்ததுகுரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி, போர்த்தன, பொடித்து உரோமப் புளகங்கள்; பூவின் மாரி தூர்த்தனர், விண்ணோர், மேகம் சொரிந்தென, அனகன் சொன்ன வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா. |
அனகன் சொன்ன வார்த்தை-குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன சொல்;எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்; மறையினும் -வேதவாக்கைக் காட்டிலும்;மெய் என்று உன்னா - உண்மையானதாகும் என்று எண்ணி;குரக்குச் சேனை ஆர்த்தது- குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது;அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின் புதல்வனான அனுமன்;மேனி -மேனியை;உரோமப் புளகங்கள்- மயிர்ச்சிலிப்புகள்;பொடித்துப் போர்த்தன -அரும்பி மறைத்து விட்டன; விண்ணோர் -தேவர்கள்;பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால் பூமியை நிரப்பினர்;மேகம் சொரிந்தன- மேகங்கள் மழையைப் பொழிந்தன. இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும், யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை மகிழ்ந்தது எனலுமாம். தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன். இராவண வதம் நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால் வானவர் பூமாரி பொழிந்தனர். இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம். 28 |