சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது. பளிக்கு - பளிங்கு; அறை - பாறை; நாரம் - தண்ணீர். இது வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு - தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால் குறிப்புவினைமுற்று. தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை 'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும் அறியலாம். 31 கலிவிருத்தம் | 3817. | அயர்வுஇல் கேள்வி சால் அறிஞர் - வேலை முன், பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல், குயிலும் மா மணிக் குழுவு சோதியால், வெயிலும், வெள்ளி வெண் மதியும், மேம்படா. |
அயர்வுஇல் கேள்விசால் -தளர்வு இல்லாத கேள்வியால் நிரம் பப்பெற்ற;அறிஞர் வேலைமுன் - அறிஞர்களின் கடல்போன்ற கூட்டத்திற்கு முன்;பயில்வு இல் கல்வியார் - கல்விப் பயிற்சி இல்லாதவர்கள்;பொலிவு இல் பான்மை போல் -மேன்மையில்லாது; விளங்குதல் போல;குயிலும் மாமணிக் குழுவும் சோதியால் -அச்சோலையில் பாதிக்கப்பட்ட சிறந்த மணிகளின் திரண்ட ஒளியால்;வெயிலும் -சூரிய ஒளியும்;வெள்ளி வெண் மதியும்- வெள்ளி போன்ற வெண்திங்களின் ஒளியும்;மேம்படா - மேம்பட்டுத் தோன்றவில்லை. இதனால் அங்குள்ள இரத்தினங்களின் ஒளி சூரிய சந்திரர்களின் ஒளியினுக்கு மிக்க விளங்குவது அறியப்படுகிறது. அயர்வு - ஐயம்திரிபு. கேள்வியானது கல்வி அறிவைப் பெருக்குதலால் 'கேள்விசால் அறிஞர்' என்றார். வேலை - கடல்; கடல் போன்ற அவையை உணர்த்திற்று; உவமை ஆகுபெயர். கற்றார் முன் கல்லார் போல என்பது உவமை. ''வாசகம் வல்லார் முன்னின்று யாவர் வாய் திறக்க வல்லார்'' (895) ''எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்'' (நன்னெறி - 21) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 32 இராமன் சுக்கிரீவனோடு விருந்துண்ணுதல் | 3818. | ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய், மேய மைந்தரும், கவியின் வேந்தனும், தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார், ஆய அன்பினோடு அளவளாவுவார். |
ஏய அன்னது ஆம் -இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய;இனிய சோலைவாய் -இனிமைமிக்க சோலையிடத்து;மேய மைந்தரும் - |