பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்87

(வானரர்க்குச்) சிறந்த விருந்தினனாகி;நோக்கி - தனக்கு அவர்கள் விருந்து
நடத்தியதைப் பார்த்து;நொந்து - (சுக்கிரீவன் மனைவியைக் காணாமையால்)
மனம் வருந்தி;சிந்தியா -ஆலோசித்து;பின் -பின்னர்;பொருந்தும்
நல்மனைக்கு
- (சுக்கிரீவனைப் பார்த்து) பொருந்திய நல்ல இல்லற
வாழ்க்கைக்கு;உரிய பூவையைஉரியவளான மனைவியை;நீயும் பிரிந்துளாய்
கொல் -
(என்னைப்போல) நீயும் பிரிந்துள்ளாயோ? என்றான் -என்று
வினவினான்.

     விருந்தினனாகிய தன்னைச் சுக்கிரீவன் மனைவி இல்லாமல்
உபசரிப்பதைக் கண்டு 'நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்' என
இராமன் வினவினான்.  மனையாள் இல்லாத இடத்து விருந்தோம்புதல்
சிறக்காது என்பர்.  மகளிரும் விருந்தோம்புதலைத் தலையாய கடனாகக்
கொண்டனர் என்பதை 'வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே?'
(67) என்ற அடிகள் உணர்த்தும்.  ''விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை''
(சிலம்பு - 2 - 16 - 73) என்ற கண்ணகியின் வருத்தமும் விருந்தோம்பலில்
மகளிர் பங்கை உணர்த்தும்.  மனை - இல்லற வாழ்க்கை; இடவாகுபெயர்;
பூவை - உவமை ஆகுபெயர்; நீயும் - உம்மை இறந்தது தழுவிய எச்ச
உம்மை.                                                    35

சுக்கிரீவன் நிலையை அனுமன் உரைத்தல்

3821.என்றவேலையில்
     எழுந்து, மாருதி,
குன்று போல நின்று,
     இரு கை கூப்பினான் -
'நின்ற நீதியாய்!
     நெடிது கேட்டியால்!
ஒன்று, யான் உனக்கு
     உரைப்பது உண்டு' எனா:

     என்ற வேலையில் -என்று இராமன் சுக்கிரீவனை வினவிய பொழுதில்;
மாருதி -
அனுமன்;குன்று போல எழுந்து நின்று -மலை போல எழுந்து
நின்று;இருகை கூப்பினான் -இரண்டு கைகளையும் கூப்பியவனாய்;நின்ற
நீதியாய் -
(இராமனை நோக்கி) 'நிலை பெற்ற நீதியை உடையவனே! யான்
உனக்கு -
நான் உனக்கு;உரைப்பது ஒன்று உண்டு -சொல்ல வேண்டுவது
ஒன்று உண்டு;நெடிது கேட்டி -அதனைத் தொடக்கம் முதல் இறுதி வரை
கேட்பாயாக';எனா - என்று கூறி . . . .

     தன் மனைவியை இழந்த செய்தியைச் சுக்கிரீவன் தானே கூறுதல் தகுதி
அன்று என்று கருதி, அனுமன் அதைக் கூறினான்.  விருந்தினரை
மனைவியுடன் இருந்தே உபசரித்தல் இல்வாழ்வானுக்கு முறை என்பதை
உணர்ந்தே இராமன் வினாவினான் என்பதைக் குறிப்பிட 'நின்ற நீதியாய்' என
விளித்தான். 'என்று கூறி' (எனா) என்ற எச்சம் மேல்வரும் அனுமன் கூற்றுகை
நோக்கி நின்றது.                                                36