பக்கம் எண் :

90கிட்கிந்தா காண்டம்

3825.'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;

     கிட்டுவார் பொரக் கிடைக்கின் -போர்கருதி தன் எதிரே வருபவர்
கிடைக்கப்பெற்றால்;அன்னவர் பட்ட நல்வலம்-அவர்களிடம் உள்ள நல்ல
வலிமையில்;பாகம் எய்துவான் -பாதியைத் தான் அடைவான்;எட்டு
மாதிரத்து இறுதி -
எட்டுத் திக்கு எல்லையிலும்;நாளும் உற்று -
நாள்தோறும் சென்று;அட்ட மூர்த்தி -அட்டமூர்த்தியாய் விளங்கும்
சிவபிரானின்;தாள்பணியும் -திருவடிகளை வணங்குகிற;ஆற்றலான் -
ஆற்றலையுடைவன்.

     வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு
சிவன்பால் வரம்பெற்றிருந்தான்.  இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன்
வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன்
கூற்றாலும் அறியலாம்.  அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன்,
இயமானன் என்பன.  இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்;
சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான்.  நாளும் எட்டுத் திசைகளுக்குச்
சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்'
என்றார்.  வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால்
உணர்த்தப்படுகின்றன.                                           40

3826.'கால்செலாது அவன் முன்னர்;
     கந்த வேள்
வேல் செலாது அவன்
     மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய்
     அலது, இராவணன்
கோல் செலாது; அவன்
     குடை செலாது அரோ.

     அவன் முன்னர் -அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக; கால்
செலாது -
காற்றுச் செல்லாது;அவன் மார்பில் -அவ்வாலியின் மார்பில்;
கந்தவேள் வேல் செலாது -
முருகப்பிரானின் வேலும் நுழையாது;
வென்றியான் -
வெற்றியை உடையவனான அவ்வாலியின்;வால் செலாத
வாய் அலது-
வால் செல்லாத இடத்தில் அல்லாமல் (வால் சென்ற இடத்தில்);
இராவணன் கோல் செலாது -
இராவணனது ஆட்சி செல்லாது;அவன்
குடை செலாது -
அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.

     வாலியின் விரைந்த செலவையும், அவனது வன்மை, வென்றிகளையும்
இப்பாடல் உணர்த்துகிறது. கால் - காற்று. வலிமையில் சிறந்தவன்
வாயுதேவன்.