பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்91

அந்தக் காற்றும் வேகத்தில் வாலியின் வேகத்திற்குத் தோற்றுவிடும் என்பது
கருத்து. சரவணப் பொய்கையில் ஆறு உருவங்களாய்க் கிடந்து
பார்வதிதேவியால் ஓருருவம் ஆக்கப்பட்டமையால் 'கந்தன்' எனப்
பெயர்பெற்றான். கந்தவேள் - இருபெயரொட்டு; கந்தனாகிய வேள்.  வேள் -
வேட்கையை உண்டு பண்ணுபவன்.  இச்சொல் மன்மதனுக்கும் பெயர்
ஆதலால் அதனை விலக்குதற்குக் 'கந்தவேள்' என்றார். கிரவுஞ்சம் என்னும்
மலையைப் பிளந்த முருகன் வேலும் வாலியின் மார்பைத் துளைக்காது
என்பதால் வாலியுடைய மார்பின் வன்மை புலப்படும்.

     வென்றியான் - வாலி - இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களையும்
வென்ற இராவணனது கோலும் குடையும் வாலியின் வாலி சென்ற இடத்துச்
செல்லாது என வாலியின் வீரமிகுதி கூறப்பட்டது. முன் அவ்வாலியின் வாலில்
கட்டுண்டு இராவணன் இடர்ப்பட்டவனாதலின், அவ்வாலுக்கு அஞ்சி
அவ்விடம் செல்லமாட்டான்; அவ்வாலுக்கே அஞ்சுபவன் வாலியின்
தோள்வலிக்கு எதிர்நிற்கமாட்டான் என்பது கருத்து.  வாலியின் வாலுக்கு
இராவணன் அஞ்சுபவன் என்பதை ''வெஞ்சின வாலி மீளான், வாலும் போய்
விளிந்தது அன்றே'' (5888), 'நிறையடிக் கோல வாலின் நிலைமையை
நினையுந்தோறும் பறையடிக்கின்ற அந்தப் பயம்மிகப் பறந்ததன்றே' (4084)
என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளால் முறையே அறியலாம். 'வரங்கொள்
வாலிபால் தோற்றனென்' (6177) என்று இராவணன் கூறுவதும் காண்க.
பின்னர் வாலியும் இராவணனும் நட்புக்கொண்டனராதலின் இராவணனைக்
கொல்வதற்கு வாலியைக் கொல்வது இன்றியமையாதது என்பது புலப்படுகிறது.
                                                            41

3827.'மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே, அவன் பேருமேல்; நெடுங்
 காரும், வானமும், கதிரும், நாகமும்,
தூருமே, அவன் பெரிய தோள்களால்.

     அவன் -அவ்வாலி;பேருமேல் -இடம் பெயர்ந்து எழுவானானால்
(அந்த அதிர்ச்சியில்);மேருவே முதல் கிரிகள் -மேரு முதலிய பெரிய
மலைகளெல்லாம்;வேரொடும் பேருமே -வேரொடு இடம் விட்டுப்
பெயர்ந்து போகும்;அவன் பெரிய தோள்களால் -அவனது பெரிய
தோள்களால்;நெடுங்காரும், வானமும் -பெரிய மேகங்களும், ஆகாயமும்;
கதிரும் நாகமும்
 - சூரிய, சந்திரர்களும், விண்ணுலகமும்;தூருமே -
மறைந்து போய்விடும்.

     வாலி இயல்பாக அடிவைத்துச் செல்லுகையில் அவ்வதிர்ச்சியைத்
தாங்காது பெரிய மலைகளும் நிலைகுலைந்துவிடும் என அவனது வேகத்தின்
பெருமை கூறப்பட்டது.  அவனுடைய தோள்கள் மிக உயர்ந்து நிற்றலால்,
மேகம் முதலியன அத்தோள்களில் மறையும் என அத்தோள்களின் பருமையும்
நெடுமையும் உயர்வுநவிற்சி உத்தியால் உணர்த்தப்பட்டன.

     'பெயருமேல் நெடும்பூதங்கள் ஐந்தொடும் பெயரும்' (6201) என்ற
இரணியன் ஆற்றலை ஒப்பிட்டுக்காண்க.  மேருவே - ஏகாரம் உயர்வு சிறப்பு;
பேரும் - பெயரும் என்பதன் மரூஉ.                               42