பக்கம் எண் :

92கிட்கிந்தா காண்டம்

3828..'பார் இடந்த வெம் பன்றி, பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை, நேர் உளான்;
மார்பு இடந்த மா எனினும், மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ!

     பண்டை நாள் -முன்பு;பார் இடந்த -பூமியைத் தன் கொம்பால்
குத்தி எடுத்த;வெம்பன்றி -சினம்மிகுந்த வராகத்தையும்;நீர் கடைந்த -
(மந்தர மலையாகிய மத்தை அழுத்தாமல் தாங்கியிருந்து) கடலைக் கடந்த;
பேர் ஆமை -
பெரிய கூர்மத்தையும்;நேர் உளான் - வலிமையால்
நிகர்ப்பவன்;மார்பு இடந்த -இரணியனின் மார்பினைப் பிளந்த;மா
எனினும் -
நரசிங்கமே வந்ததாயினும்;அவன் -அவ்வாலியின்;தார்கிடந்த
தோள் -
மாலையணிந்த தோள்களை;தகைய வல்லதோ - அடக்கக் கூடிய
வலிமையுடையதாகுமோ? (ஆகாது).

     வாலி பூமியைப் பெயர்க்கும் ஆற்றலும், மலையைத் தாங்கும்
வன்மையும், கடலைக்கடையும் திறலும் உடையவன் என்பது இதனால்
பெறப்பட்டது.  'பண்டை நாள்' என்பது இடைநிலை விளக்காய் முன்னும்
சென்று பொருந்தியது.  இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கத்திற்கும்
வாலியின் தோள் வலிமையை அடக்க இயலாது என வாலியின்
தோளாற்றலைக் கம்பர் எடுத்துரைக்கிறார்.  திருமாலின் அவதாரமான
இராமனும் வாலிக்கு எதிர்நின்று போர் புரியாது மறைந்து நின்று வெல்வது
ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.                                       43

3829.'படர்ந்த நீள் நெடுந் தலை பரப்பி, மீது
அடர்ந்து பாரம் வந்து உற, அனந்தனும்
கிடந்து தாங்கும் இக் கிரியை மேயினான்,
நடந்து தாங்கும், இப் புவனம், நாள் எலாம்.

     அனந்தனும் -ஆதிசேடனும்;படர்ந்த நீள்நெடும் தலைபரப்பி -
ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக்கொண்டு;மீது -
அத்தலைகளின் மேலே;அடர்ந்து பாரம் வந்துஉற -நெருங்கிப் பாரம்
மிகுதியாகப் பொருந்தியிருக்க;இடந்து -(நின்று தாங்க முடியாமல்) கீழே
கிடந்து;இப்புவனம் நாள்எலாம் -இப் பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்);
தாங்கும் -
தாங்குவான்;இக்கிரியை மேயினான் -இந்தக் கிட்கிந்தை
மலையில் வாழும் வாலியோ;நடந்து தாங்கும் - நடந்து கொண்டே
அப்பூமியைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடையவன்.

     பூமியின் பாரத்தைத் தாங்கமாட்டாமல் ஆயிரம் தலைகளை உடைய
ஆதிசேடன் வருந்திக் கிடந்து தாங்கிக் கொண்டிருக்க, ஒரு தலை உடைய
வாலி நடந்து கொண்டு எளிதாகத் தாங்குவான் எனக்கூறி ஆதிசேடனை விட
வாலி வலிமை மிக்கவன் என்பது உணர்த்தப்பட்டது.  இது வேற்றுமை அணி
பொருந்தியது.  கிட்கிந்தை அருகில் தோன்றுவதால் 'இக்கிரி' என்றான்.
அனந்தனும் - உம்மை உயர்வுசிறப்பு.                             44