| 3830. | 'கடல் உளைப்பதும், கால் சலிப்பதும், மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் தொடர மற்றவன் சுளியும் என்று அலால், - அடலின் வெற்றியாய்! - அயலின் ஆவவோ? |
அடலின் வெற்றியாய் -வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே! தொடர -இடைவிடாமல்;கடல் உளைப்பதும் -கரை கடவாமல் கடல் ஒலித்துக் கொண்டிருப்பதும்;கால் சலிப்பதும் -காற்றுவீசிக் கொண்டிருப்பதும்;மிடல் அருக்கர் -வலிமைமிக்க சூரியர்கள்;தேர்மீது செல்வதும்- தேர் மீதேறிச் செல்வதும்;அவன் - அவ்வொலி;சுளியும் என்று அலால் -சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி; அயலின் ஆவவோ -பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல). இது வாலியின் கோபத்தை உணர்த்தியது. கடல் முதலியனவெல்லாம் அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம். உளைப்பது - மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது - எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும் மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல். வாலி சினத்திற்கு அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி. மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர் தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான். தொடர - இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும் என்பவற்றோடு இயையும். இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும் கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில் ஆற்றலுடையவன் என்பது விளங்கும். அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. 45 | 3831. | 'வெள்ளம் ஏழு பத்து உள்ள, மேருவைத் தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்; உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால், - வள்ளலே! - அவன் வலியின் வன்மையால். |
ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம் என்கின்ற அளவு உள்ளதும்;மேருவைத் தள்ளல் ஆன -மேருமலையைத் தள்ளக்கூடியதுமான;தோள் அரியின் தானையான் -தோள் வலிமை உள்ளதுமான வானரப்படையை உடையவன்;வள்ளலே - வள்ளல்தன்மை உடையவனே! அவன் - அவ்வாலி;வலியின் வன்மையால் -வலிமையின் மிகுதியால்;உள்ளம் ஒன்றி -மனம் ஒன்று பட்டு;எவ்வுயிரும் வாழும் - எல்லா உயிர்களும் வாழ்கின்றன; |