முட்டி நின்று-(அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர் செய்த;அவன் முரண் உரத்தின் நேர் -அவனது வலிய ஆற்றலுக்கு எதிரில்;ஒட்ட அஞ்சி - நின்ற போர்செய்வதற்கு அஞ்சி;நெஞ்சு உலைய ஓடினான் -மனம் நடுங்கத் தப்பி ஓடினான்;வட்ட மண்டலத்து - வட்ட வடிவமாகிய பூமியில்;வாழ்வு அரிது -உயிர் வாழ்தல் அரிது;எனா - என்று எண்ணி;எட்ட அரும் பெரும்பிலனுள் -எவரும் செல்லுதற்கரிய பெரிய பிலத்துவாரத்துள்;எய்தினான் -புகுந்தான். வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட 'எட்டரும் பெரும்பிலன்' என்றான். பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி. பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி. 51 | 3837. | 'எய்து காலை, அப்பிலனுள் எய்தி, ''யான் நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; - நோன்மையாய்! - செய்தி, காவல், நீ, சிறிது போழ்து'' எனா, வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான். |
எய்து காலை -(அவ்வாறு மாயாவி) பிலத்தினுள் நுழைந்த போது; வெகுளி மேயினான் -சினங்கொண்டவனாகிய வாலி;நோன்மையாய் - (சுக்கிரீவனை நோக்கி) வலிமை உடையவனே! அப்பிலனுள் எய்தி -அவன் நுழைந்த பிலத்தினுள் நுழைந்து;யான்- நான்;நொய்தின் அங்கு-விரைவில் அங்குள்ள;அவற் கொணர் வென்-அவனைப் பிடித்துக் கொணர்வேன்;நீ சிறிது போழ்து -நீ சிறிது நேரம்;காவல் செய்தி -இப்பிலத்திலிருந்து வேறுவகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்;எனா - என்று கூறி;வெய்தின் எய்தினான்- விரைவாக அப்பிலத்துள் சென்றான். மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு தம்பியை அப்பிலவாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான் என்பதாம். காவல் காக்கும் வலிமையுடையனாதலின் தம்பியை 'நோன்மையாய்' என விளித்தான். நொய்து, வெய்து என்பன விரைவுப் பொருள். அவற்கொணர்வென் - இரண்டாம் வேற்றுமைத்தொகையாதலின் இயல்பாக வேண்டிய அவன் என்னும் உயர்திணைப்பெயர் விகாரமாயிற்று. முன் செய்யுளோடு இச்செய்யுள் அந்தாதித்தொடையாகத் தொடர்ந்தது கருதத்தக்கது. 52 |