பக்கம் எண் :

ஊர் தேடு படலம்121

முரன்று பாட (சிந்.1959) என்னும் அடிகளையும் களிவண்டு மந்தார
மாலையின் மலரை மொய்த்து அதிற்றேனை உண்டு மகிழ்ந்து காந்தாரம்
என்னும் பண்ணையாக்கி ஆளாபனஞ் செய்து பாடும்படி”என வரும் உரைப்
பகுதியையும் ஒப்பிடுக. (அண் - பல்கலை - கழ - பதிப்பு)

     அமைவண்டு -பெரும்பான்மையான பாடம், அமை -அழகு.     (80)

4915.

எல்லாம்உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர்
நல்லாள்;அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்;
‘நில்லாய்! நில்லாய்!’ என்று உரை நேரா
                             நினையாமுன்
வல்லேசென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான்.

     எல்லாம் உட்கும்- எல்லாஉயிர்க் கூட்டங்களும் பயப்படும்படியான;
ஆழி இலங்கை -
கடலாற் சூழப்பெற்ற இலங்கையாகிய பழமையான ஊர்க்கு;
இகல் மூதூர் நல்லாள் -
வலிமை மிக்க நன்மை செய்பவளும்; அ ஊர்
வைகும் -
அந்த இலங்கை தங்கும்; உறை ஒக்கும் நயனத்தாள் - உறை
போன்ற கண்களையுடையவளும் ஆகிய இலங்கை மாதேவி; (அனுமனை
நோக்கி) நில்லாய் நில்லாய் - நில், நில்; என்று உரை நேரா - என்று
முழங்கி; நினையா முன் - (எதிரே வருவார் யார் என்று அனுமன்)
எண்ணுவதற்கு முன்னே; வல்லே சென்றாள் - வேகமாக (அனுமன் முன்)
போனாள்; கண்டான் மாருதி - அதைக் கண்ட அனுமன்; வருக என்றான் -
வருவாயாக என்று கூறினான்.

     ஆழி - கடற்கரை.ஆழி கடல் அரையா - சுந்தரர். பெருங்கடற்கு
ஆழியனையன் (புறம் 330). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர் (குறள் 989)
அழகர் உரை.                                          (81)

4916.

ஆகாசெய்தாய் ! அஞ்சலை போலும் ?
                           அறிவுஇல்லாய்!
சாகாமூலம் தின்றுஉழல்வார்மேல் சலம் என்னாம் ?
பாகு ஆர்இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே,
போகாய் என்றாள் - பொங்கு அழல் என்னப்புகை
                              கண்ணாள்.