பொங்கு அழல்என்ன - மூண்டு எரிகின்ற நெருப்பைப் போல; புகை கண்ணாள் - புகையும் கண்களையுடைய இலங்கைத்தேவி; (அனுமனை நோக்கி) அறிவு இல்லாய் - அறிவற்ற பேதையே; ஆகா செய்தாய் - செய்யத் தகாதவற்றைப் புரிந்தாய்; அஞ்சலை - நீ சிறிதும் பயப்படவில்லை; சாகா மூலம் தின்று - இலைகளையும் கிழங்குகளையும் தின்று; உழல்வார் மேல் - திரிகின்ற அற்பக்குரங்குகள் மேல்; சலம் என்னாம் - கோபம் கொள்வதால் என்ன பயன்; பாகு ஆர் - சுண்ணக்குழம்பு பூசப்பெற்ற; இஞ்சிப் பொன்மதில் - கோட்டையொடு கூடிய மதிலை; தாவிப் பகையாதே- கடந்து சென்று (என்னுடன்) பகைத்துக் கொள்ளாதே; போகாய் - ஓடிப்போவாயாக; என்றாள் - என்று கூறினாள். சாகம் - இலை.‘அருந்தவத்தின் சாகம் தழைத்து’ (கம்ப. 1671) பகையாதே போகாய் - பகையாமல் செல்க, என்றும் கூறலாம். பகையாதே என்பது ஏவலாகவும் எதிர் மறைப் பெயர் எச்சமாகவும் வரும். (82) அனுமனும் இலங்கைத்தேவியும் உரையாடுதல் 4917. | களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம்மூள விளியா நின்றே,நீதி நலத்தின் வினை ஓர்வான், ‘அளியால் இவ்ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்; எளியேன்உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு ?’ என்றான். |
நீதி - நீதியுடன்ஒன்றுபட்ட; நலத்தின் வினை - நன்மையின் பயனை; ஓர்வான் - அறிந்தவனும்; களியா - செருக்கடையாத; உள்ளத்து அண்ணல் - உள்ளத்தைப் பெற்றவனுமான அனுமன்; மனத்தில் கதம்மூள - கோபத்தீ மூண்டு எரிய; விளியா நின்று - (அதனை) அழித்து (இலங்கைத் தேவியைப் பார்த்து); இ ஊர் - இந்த ஊரை; நலத்தால் - இந்நகரின் அழகால்; காணும் அளியால் - காணவேண்டும் என்னும் ஆசையால்; அணைகின்றேன் - அடைந்துள்ளேன்; எளியேன் - பலமில்லாத யான்; இங்கு உற்றால் - இவ்விடத்தை அடைந்தால்; உனக்கு இழவு யாது - உனக்கு நேரும் நட்டம் யாது; என்றான் - என்று அமைதியாகப் பேசினான். |