அடியாமுன்னம்- அவள் அடிப்பதற்கு முன்னே; அம்கை அனைத்தும் - அவளுடைய எட்டுக்கைகளையும்; ஒரு கையால் பிடியா - ஒரு கையாற் பற்றிக் கொண்டு; இவள் - இந்தப் பகைத்தி; பெண் - பெண்ணாக உள்ளாள் (ஆதலால்); என் - யான் எப்படிப் போரிடுவேன்; கொல்லின் - கொன்றால்; பிழை - பாபமாகும்; என்னா- என்றுகருதி; ஓடியா-மனம் இரங்கி; நெஞ்சத்து - அவள் மார்பில் (மற்றொரு கையால்); இடியேறு உண்ட - பெருத்த இடியால் தாக்கப்பெற்ற; மால்வரைபோல் - பெருமலைபோல்; உயிரோடும் - உயிருடன்; மண் இடை வீழ்ந்தாள் - பூமியிலே சாய்ந்தாள். (91) 4926. | விழுந்தாள், நொந்தாள், வெங்குருதிச் செம்புனல் வெள்ளத்து அழுந்தாநின்றாள், நான்முகனார்தம் அருள் ஊன்றி எழுந்தாள்;யாரும் யாவையும், எல்லா உலகத்தும் தொழும்தாள்வீரன் தூதுவன்முன் நின்று, இவை சொன்னாள். |
(இலங்கைத் தேவி) விழுந்தாள் -பூமியிலேவிழுந்தாள்; நொந்தாள் - (தன்னை) நொந்து கொண்டாள்; வெம் - வெப்பமான; குருதிச் செம்புனல் வெள்ளத்து - இரத்தமாகிய செந்நீர் வெள்ளத்து; அழுந்தா நின்றாள் - முழுகினாள் (பிறகு); நான்முகனார்தம் - பிரம்ம தேவனுடைய; அருள் ஊன்றி - திருவருளைப் பற்றிக் கொண்டு; எழுந்தாள் - எழுந்து நின்றாள்; எல்லா உலகத்தும் - எல்லா உலகங்களிலும் உள்ள; யாரும் - உயர்திணைப் பொருள்களும்; யாவையும் - அஃறிணைப் பொருள்களும்; தொழும் - கைகூப்பிப் பணியும்; தாள்வீரன் - திருவடியையுடைய இராமபிரானின்; தூதுவன் முன் நின்று - தூதுவனுக்கு முன்னே நின்று; இவை சொன்னாள் - இந்த மொழியைக் கூறினாள். இலங்கைத் தேவி,பூமியிலே விழுந்தாள்; நொந்தாள்; பிரம்மதேவனின் திருவருளைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். இராமதூதனைப் பார்த்துப் பின்வருமாறு பேசினாள். யாவரும் உயர்திணை, முப்பாலையும், யாவை, அஃறிணை ஒருமை பன்மையையும் உணர்த்தும் - (தொல்-சொல்-210, 219) (92) |