பக்கம் எண் :

156சுந்தர காண்டம்

பெருமையுடைய; அம் -அழகிய; பரவைப் புனலினால் - கடலின்
தண்ணீரினால்; அவித்தான் - அணைத்தான்.

எதிரே இருப்பவன்இராவணன் என்று கருதியபோது உண்டாகிய சீற்றம்
( இராவணன் அல்லன் என்ற போது) அவிந்தது. இராவணன் செய்த
தீச்செயலால் அனுமன் அவன்பால் சீற்றம் கொண்டான். வெறும் புல்லர்
தீமையை வேரற்றொழிக்கும்..... கொடும் சினம் மாசற்றார் கோள் (உரைச்
சூத்திரம்) (131)

                                                                                             கும்பகருணனைக் கடந்து அப்பால்சென்று தேடுதல்

4966.

அவித்துநின்று, எவன் ஆயினும் ஆக என்று அங்கை
கவித்துநீங்கிடச் சில்பகல் என்பது கருதாச்
செவிக்குத்தேன்என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன்அனையவன் உறையுளைக் கடந்தான்.

இராகவன் புகழினை- இராமபிரானுடைய கீர்த்தியை; செவிக்குத்
தேன் என -
செவிகட்குத் தேன் போல; திருத்தும் - பரிமாறுகின்ற; கவிக்
குநாயகன் -
வானரர்களின் தலைவனாகிய அனுமன்; அவித்து
நின்று -
கோபக்கனலைத் தணித்துக் கொண்டு; எவன் ஆயினும் ஆக -
இங்கேயிருப்பவன் யாவன் ஆயினும் ஆகட்டும்; என்று - என்று எண்ணி;
அங்கைகவித்து -
அகங்கையைப் புறங்கை ஆக்கி; ‘நீங்கிட சிலபகல்’ -
இறப்பதற்குச் சில நாள்களே உள்ளன; என்பது கருதா - என்பதை
மனத்திலே எண்ணி; அனையவன் - அந்த கும்பகருணனின்; உறையுளை -
மாளிகையை; கடந்தான் - புறந்தள்ளிச் சென்றான்.

இராகவன் புகழினைத் தன் செவிக்கும் பிறர் செவிக்கும்பரிமாறும்
அனுமன் திருத்துதல் - பரிமாறுதல். செம்மையாக்குதல் என்றும் கூறலாம்.
எவ்விடத்தும் ராமன் சரிதையாம் - அவ்விடத்தினும் அஞ்சலி யத்தனாய்
இருந்து இராமகாதை கட்பவன் அனுமன் ஆதலின், புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்றான். திருத்துதல் - கறி திருத்துதல் என்பதுபோலப்
பக்குவம் செய்தலாம். உறையுள் - தங்குமிடம். கிட - இகழ்ச்சிக் குறிப்பு.
இப்பாடல் பின்னிரண்டு வரிகள் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் பொருந்தும்
என்பர் சான்றோர். கம்பனுக்குக் கொள்ளுங்கால் திருத்தும் என்பது
செம்மைப்படுத்தல் என்பது பொருள். (132)