நுணுகும் - நுட்பமாகுவான்;வீங்கும் - பருமன் ஆகுவான்; அவன் நிலை - அந்த அனுமனின் நிலைமையை; நுவல்வார் - உள்ளபடி எடுத்துக் கூறவல்லவர்; யாவர் ? - எவர் ? மலரின்கண்ணும்,மலர்த்தண்டின் கண்ணும் புகைபோலக் காற்றைப் போல ஒன்றுபட்டுத் தேடினான் அனுமன். திருமால், மேருமலையிலும், அணுவிலும் அந்தர் யாமியாய் இருப்பான். அதுபோல் அனுமன் பெரும் பொருளிலும் சிறிய பொருளிலும் கலந்துள்ளான் என்க. நம்பிள்ளை, “பரமாணுக்கள் தோறும் நிறைந்திருப்பான். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பான்,” என்று வரைந்தார் (திருவாய் 11,10) தூணிலும் உளன்... கோணிலும் உளன் என்பது பிரகலாதனின் உறுதிப்பாடு. (கம்ப, 6312) (134) வீடணனைக் காணுதல் 4969. | ஏந்தல்,இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்தி, காந்தள்மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான் வேந்தர்,வேதியர், மேல்உளோர், கீழ்உளோர், விரும்பப் போந்தபுண்ணியன் கண்அகன் கோயிலுள் புக்கான். |
ஏந்தல் -அன்பர்களைப் பாதுகாக்கும் அனுமன்; காந்தள் மெல்விரல் - காந்தள் இதழ்போன்ற மெல்லிய விரல்களைப் பெற்ற; மடந்தையர் யாரையும் - பெண்கள் யாவரையும்; காண்பான் - காணும் பொருட்டாக; இவ்வகை - (நுணுகிப் பெருகி) இப்படி; எவ்வழி மருங்கினும் - எல்லா இடங்களிலும்; எய்தி - அடைந்து; வேந்தர் வேதியர் - அரசர்களும் அந்தணர்களும்; மேல் உளோர் - தேவர்களும்; கீழ்உளோர் - நாகலோகத்தவர்களும்; விரும்ப - விருப்பம் கொள்ளும்படி; போந்த புண்ணியன் - அவதரித்த வீடணனின்; கண் அகன் - இடம் அகன்ற; கோயிலுள் புக்கான் - அரண்மனைக்குள் நுழைந்தான். அனுமன், மகளிர்யாவரையும் ஆராய்ந்து காண்பதற்காக, எல்லா இடங்களிலும் தேடி வீடணனின் அரண்மனையை அடைந்தான். ஏந்தல் - அன்பர்களை ஏந்துபவன் (காரணப் பெயர்) காந்தள் மலரைக் குறிக்காது இதழைக்குறித்தது ஆகுபெயர். மலர் கைக்கும், இதழ் விரலுக்கும் உவமையாகும். புண்ணியன் என்று வீடணனைக் குறித்தது போற்றி உணரத்தக்கது. (135) |