பக்கம் எண் :

164சுந்தர காண்டம்

இந்திர சித்தனைத்தீர்ந்தான் - இந்திர சித்தனைநீங்கி; ஆயிரம்
ஆயிரத்து அடங்கா -
ஆயிரத்தால் பெருக்கப்பட்ட ஆயிரம் என்னும்
எண்ணிக்கையில் அடங்காமல்; துன்று - நெருங்கியுள்ள; மாளிகை ஓளிகள் -
மாளிகை வரிசைகளை ; துரிசு அற - குற்றங்கள் இல்லாமல்; துருவிச்
சென்று -
ஊடுருவிப் போய்; தேடினன் - தேடிப் பார்த்தான்.

     கைமறித்தல் -சரி மேலே ஆவன செய்வோம் என்னும் பொருளை
உணர்த்தும் கரச்செயல். கைமறித்தல், கவிச்சக்கரவர்த்தி விரும்பும் சொல்.
துருவி, தேடினன் - என்ற தொடர் ஆழமானது. துருவுதல் ஊடுருவிப்
பார்த்தல். கவிச்சக்கரவர்த்தி இதனைத் தேடுதல் என்னும் சாதாரணப்
பொருளிலும், ஊடுருவிப் பார்த்தல் என்னும் சார்புப் பொருளிலும் பேசுவார்.
‘துருவுமாமணி ஆரம்’ (கம்ப. 1105) என்ற இடத்தில் துளையிடுதல் என்னும்
பொருள் தந்தது. அதன் சார்புப் பொருளே ஊடுருவல்.             (143)

4978.

அக்கன்மாளிகை கடந்துபோய், மேல், அதிகாயன்
தொக்ககோயிலும் தம்பியர் இல்லமும் துருவி
தக்க மந்திரத்தலைவர்மா மனைகளும் தடவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரமென, புகழோன்.*

     புகழோன் -புகழ்மிக்க அனுமன்; அக்கன் மாளிகை கடந்து -
அட்சய குமாரன் மாளிகைளைக் கடந்து; மேல் போய் - அப்பாற் சென்று;
தொக்க -
நெருங்கியுள்ள; அதிகாயன் கோயிலும் - அதிகாயனின்
அரண்மனையும்; தம்பியர் இல்லமும் - அவனுக்கு இளையவர்களின்
வீட்டையும்; துருவி - ஊடுருவிப் பார்த்து; தக்க - தகுதியுடைய; மந்திரத்
தலைவர் -
தலைமை அமைச்சர்களின்; மாமனைகளும் - பெரிய
வீடுகளையும்; தடவி - துழவி; புக்கு - புகுந்து; இராகவன் சரமென -
இராமபிரானின் அம்பைப் போல; நீங்கினன்  - சென்றான்.

     கடந்துசெல்லுதலும், துருவிச் செல்லுதலும், தடவிச் செல்லுதலும்
இராகவனின் அம்பின் இயல்பு.‘மராமரத்தூடு செல் அம்பு’ என்றும் (கம்ப.
4280) ‘மலைஉருவி, மரம் உருவி, மண்ணுருவிற்று ஒருவாளி’, என்றும் (கம்ப.
662)’உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி’ (கம்ப 9940) என்றும்
பேசப்படுபவை உலகம் அறியும். மாருதி இராமபிரானின் அம்புக்கிணையாகப்
பேசப்படுவதைப் போலவே அங்கதன்’,வீரன் வெஞ்சிலையிற் கோத்த அம்பென
விரைவிற் போனான்’, (கம்ப. 6986) என்று பேசப்பட்டான்.         (144)