உரைக்கேன் - யாது கூறுவேன்; இக் கொடுந்துயரம் - (பிராட்டியைக் காணாத) இப்பெருந்துன்பம்; பொன்றாத பொழுது - செத்தால் அன்றி; எனக்கு - (மானமுடைய) எனக்கு; போகாது - நீங்காது. இறந்தால்துன்பம் நீங்கும் என்பது கருத்து. ஆல் - அசை. ஒன்றானும் - சிறிதும். ஒன்று ஆயினும் என்பது ஒன்றானும் என வந்தது. ஒன்று - சிறிது. ஓம்படை ஒன்றும் சொல்லாள் (சிந்தா - 232) இனியர் பரிகாரம் சிறிதும் கூறாளாய், என எழுதினார். ஆனும் என்பது ஆயினும் என்பதன் திரிபு. (226) 5061. | ‘கண்டுவரும்’ என்று இருக்கும் காகுத்தன்கவிக்குலக்கோன் ‘கொண்டுவரும்’என்றிருக்கும் யான் இழைத்த கோள் ‘இதுவால்’ புண்டரிகநயனத்தான் பால், இனி, யான் போவேனோ ? விண்டவ ரோடுஉடன்வீயாது யான் வாளாவிளிவேனோ. |
காகுத்தன் -(காகுத்தன் மரபில் தோன்றிய) இராமபிரான்; கண்டுவரும் - (அனுமன்) சீதையைப் பார்த்து வருவான்; என்று இருக்கும் - என்று எண்ணியிருப்பான்; கவிகுலக்கோன் - குரங்குகளின் தலைவன் (சுக்கிரீவன்); கொண்டுவரும் - (அனுமன்) சீதையைக் கொண்டு வருவான்; என்று இருக்கும் - என்று எண்ணியிருப்பான்; யான் - அற்பனாகிய யான்; இழைத்த - நிறைவேற்றிய; கோள் இது - இலட்சியமோ இப்படியுள்ளது; புண்டரிக நயனத்தான்பால் - தாமரைக் கண்ணன் (இராமன்) பால்; இனி - இனிமேல்; யான் போவேனோ - யான் செல்வேனோ; விண்டவரோடு - பகைத்தவர்களுடன்; உடன் வீயாது - ஒருங்கே சாகாமல்; யான் வாளா - யான் பயனின்றி; விளிவேனோ - இறப்பேனோ. விண்டவர்என்பதற்கு, அங்கதன் முதலானவர்கள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்கதன் முதலானவர்கள் இறவாமையால் அவ்வுரை வெவ்வுரை. போரில் இறப்பாரை வீரர் விரும்புவர் என்க - மந்திரப்படலம் தசரதன் மொழிகளைப் பார்க்கவும். |