இரங்குதல் - வருந்துதல்,அழுதல்; இராமனை எண்ணித் தொழுதல் - இராமபிரானை நினைந்து வணங்குதல்; சோருதல் - தளர்ச்சியடைதல்; துளங்குதல் - உடல் நடுக்கம் அடைதல்; துயர் உழந்து உயிர்த்தல் - துன்பத்தால் சிதைந்து பெருமூச்சுவிடுதல்; அழுதல் - புலம்புதல்; அன்றி - ஆகிய இச்செயலைத் தவிர; அயல் ஒன்றும் - வேறு செயல்கள் எதுவும்; செய்குவது அறியாள் - செய்வது அறியாதவளாக இருந்தாள். பிராட்டி அழுதல்முதலான செயல்களைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவளாய் இருந்தாள். மற்று - அசை. செய்குவது - கு - சாரியை. ‘காய்குவள் அல்லளோ’ - கலித்தொகை 79. (5) | 5074. | தழைத்தபொன் முலைத் தடம் கடந்து, அருவி போய்த் தாழப் புழைத்த போல,நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால், இழைக்கும்நுண்ணிய மருங்குலாள், இணை நெடுங் கண்கள், ‘மழைக்கண்’என்பது காரணக் குறி என வகுத்தாள். |
இழைக்கும்நுண்ணிய மருங்குலாள் - நூலின் இழையைவிட நுட்பமான இடையைப் பெற்ற பிராட்டி; நெடும் இணைகண்கள் - நீண்ட இரண்டு கண்கள்; புழைத்த போல - துளைபட்டுப் போனாற் போல; தழைத் தபொன்முலைத் தடம் கடந்து - சீரிய பொன்போன்றபசலை படர்ந்ததனங்களைத் தாண்டி; அருவி போய்தாழ - அருவி சென்று கீழே இறங்க;நீர் - தண்ணீரை; நிரந்தரம் - எப்போதும்; பொழிகின்ற பொலிவால் -பொழியும் மிகுதியால்; மழைக்கண் என்பது - மழைக்கண் என்றுகூறப்படுவது; காரணக்குறி என வகுத்தாள் - காரணப் பெயர் என்று கூறும்படி நியமித்தாள். பிராட்டியின் கண்கள்இடையறாது அருவிபோல் கண்ணீர் பொழிவதால் ‘மழைக்கண்’ என்றும் பெயர். மேகம் (மழை) போன்ற கண்கள் என்னும் பொருள் பெற்றுக் காரணப் பெயராயிற்று என்கிறான் கவிஞன். மழைக்கண் என்பதை இடுகுறிப் பெயர் என்று கூறியவரை மறுப்பதுபோல் உள்ளது. பொன் - பசலை. பொன் ஈன்ற நீலமாமணி முலையினாளே (சிந்தாமணி 6. 119) வகுத்தல் - நியமித்தல். ‘வகுத்தான் வகுத்தவகை’ என்று தமிழ் மறை (குறள் 377.) பேசும். பொலிவு - மிகுதி. கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை (மதுரைக் - 171) மருங்குலாள் வகுத்தாள் என்க. அருவி ‘போல்’ (அண், மல், கழ) (6) |