தமிழ் என்றதுஇலக்கணத்தை. ‘தமிழ் தந்தான்’ (கம்ப. 2611) என்று முன்பு பேசப் பெற்றது. அகத்தியன் படைத்தது மொழியன்று. இலக்கணமே. (133) | 5202. | ‘உன்னையும்கேட்டு, மற்று உன் ஊற்றமும், உடைய நாளும், பி்ன்னை இவ்அரக்கர் சேனைப் பெருமையும், முனிவர் பேணிச் சொன்னபின்,உங்கை மூக்கும், உம்பியர் தோளும் தாளும், சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ ? |
முனிவர் -தண்டகாரணிய முனிவர்கள்; உன்னையும் - உன்னுடைய தலைமையையும்; உன்ஊற்றமும் - உன்னுடைய வலிமையையும்; உடைய நாளும் - நீ பெற்றுள்ள (முக்கோடி) ஆயுளையும்; இ அரக்கர் சேனைப் பெருமையும் - இந்த அரக்கச் சேனையின் மிகுதியையும்; பேணி - நன்கு மதித்துச்; சொன்னபின் - கூறிய பிறகு; கேட்டு - கேட்டுத் தெரிந்து; பின்னை - அதற்குப் பின்பு; உங்கை மூக்கும் - உன் தங்கையின் மூக்கையும்; உம்பியர் தோளும் தாளும் - உன் தம்பிகளின் தோள்களையும் கால்களையும்; சின்ன பின்னங்கள் செய்த அதனை - கண்டங்களாகவும் துண்டங்களாகவும் பண்ணிய செயலை; நீ சிந்தியாயோ - நீகருத மாட்டாயோ. மற்று உன் -மற்று - அசை முனிவர்கள் கூறிய உன் பெருமை ஒன்றே போதும் வீரர்கள் ஒடுக்கம் அடைய. அத்தனையையும் கேட்டு உன் பகையை அவர் தேடிக் கொண்டார் என்றால் அவர்கள் வீரர்கள் என்ற முடிவு கட்ட வேண்டாமா என்கிறாள் பிராட்டி. வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல் அரசர் இயல்பு. இவற்றை அறிந்தே இராமன் செயலில் ஈடுபட்டார் என்று பிராட்டி கூறுகிறாள். உன் + ஐ = உன்னை. ஐ - தலைமை. ஐயர் - சொல் ஆய்ந்து அமைக்கப்பட்டது. உன்னை என்பதற்கு உன்னைப்பற்றி எனப் பொருள் கொள்ளலாம். பெருமை - மிகுதி. பெருமை உடைத்து இவ்வுலகு (குறள் 336) என்னும் தொடருக்கு அழகர் நிலையாமை மிகுதி உடைத்து என்று உரை வகுத்தார். பேணுதல் - நன்கு மதித்தல். தெய்வம் பேணி சென்மின் (பரிபாடல் 15-48) (134) |