கூறிக்கொண்டிருக்க(கவலைப்படாத); யான் - நான்; துப்பு அழிந்து உய்வது - பெருமை அழிய வாழ்வது; துறக்கம் துன்னவோ - சுவர்க்கத்தை அடையவோ. பழி -இலங்கையில் சிறையிருத்தல். துப்பு - பெருமை. ஆணை - ஆன்றோர் மரபு (கம்பராமாயண அகராதி) துறக்கம் துன்னவோ, எதிர்மறைத் தொனி. உயிர்துறத்தல் - உயிரை விட்டுவிடுதல். பழியின் - என்பதில் உள்ள ‘இன்’ அசை. கற்பினின் திரிதல் இன்றி (சிந்தாமணி 604) இனியர், ‘இன்’ அசை என்றார். உலகம் பெரும்பழி ஓத யான் உய்வது துறக்கம் துன்னவோ எனக்கூட்டுக. (15) 5243. | ‘அன்பு அழிசிந்தையர் ஆய ஆடவர், வன் பழிசுமக்கினும் சுமக்க; வான் உயர், துன்பு அழி,பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்; என் பழிதுடைப்பவர், என்னின் யாவரே ? |
அன்பு அழி -அன்பைத்தவிர்த்த; சிந்தையர் ஆய - உள்ளத்தைப் பெற்றவரான; ஆடவர் - இராம லக்குவர்கள்; வன்பழி - கொடும்பழியை; சுமக்கினும் சுமக்க - சுமந்தாலும் சுமக்கட்டும் (கவலையுறேன்); வான் உயர் - வான்வரை உயர்ந்த; துன்பு அழி - பிறர் துன்பத்தைப் போக்கும்; பெரும் புகழ் - மிக்க புகழ் பெற்ற; குலத்துள் தோன்றினேன் - குலத்திலே பிறந்த யான்; என்பழி - என்னுடைய நிந்தையை; துடைப்பவர் - போக்குபவர்கள்; என்னின் - என்னைவிட; யாவர் - எவர் உள்ளார். அழிசிந்தையர் -தவிர்த்த உள்ளத்தை உடையவர். அழிதல் - தவிர்தல். என் இறப்பால் இராமலக்குவர்களுக்கும் பழிவரும். அதுபற்றிக் கவலேன் என்று வெறுத்துப் பேசுகிறாள். எம் குலம் பிறர் துன்பத்தைப் போக்கும். பிறரால் துன்பத்தைத் துடைத்தலை விரும்பாது. ஆதலால் யான் என் (துன்பத்தை) பழியைத் துடைத்துக் கொள்வேன் என்கிறாள். ‘வானுயர் தோற்றம்’ என்னும் திருக்குறளில் (குறள். 272) அழகர் வானுயர் தோற்றம் என்பது வான்தோய் குடி (நாலடி 142) என்றாற் போல இலக்கணை. கவிச்சக்கரவர்த்தி இதனை ஒற்றி, ‘வான் உயர் .... குலம் என்றார். (16) 5244. | ‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, என் மஞ்சனை வைது,“பின் வழிக் கொள்வாய்” எனா. நஞ்சு அனையான்அகம் புகுந்த நங்கை யான் உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ? |
|