(அதனால்) துணுக்கம்கொண்டனன் - திடுக்குற்றான்; மெய்தீண்டக் கூசுவான் - பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; அண்டர் நாயகன் - தேவர்களின் தலைவனான இராமபிரானின்; அருள் தூதன் யான் - திருவருள் பெற்ற தூதன் யான்; ஏனா - என்றுகூறி; தொண்டைவாய் - கோவைக் கனிபோலும் வாயை உடைய; மயிலினை - மயில்போன்ற பிராட்டியை; தொழுது - வணங்கி; தோன்றினான் - வெளிப்பட்டான். பிராட்டியின்தற்கொலை முயற்சி அனுமனுக்குத் துணுக்கைத் தந்தது. அவள் செயலைத் தடுக்க வேண்டும் என்றால் மேனி தீண்ட வேண்டும். அது செய்ய அஞ்சிய அனுமன் ‘யான் இராமதூதன்’ என்றான். பிராட்டிக்கு இப்போது வேண்டுவது இராமனின் அருள். அதன் மூலம்தான் அவள் முயற்சி தடை படும். ஆதலின், அருள் வடிவாக அனுமன் வந்தான். கூசுதல் - அஞ்சுதல். இலங்கைக் கோமானைக் கூச அடர்த்து (தேவாரம் 3 - 1936 - 8) வான்மீகத்தில் தன் சடையைக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப் பெற்றது. தொண்டை - கோவை. ஆதொண்டை - முதல் குறைந்து நின்றது. தொண்டையங் கனிவாய் மென்சொல் சிற்றிடை (வேதாரணிய புராணம் விசுவா - 29) (22) அனுமன் தன்னைஇராமதூதன் என்று மொழிதல். | 5250. | ‘அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்; குடைந்து உலகுஅனைத்தையும் நாடும் கொட்பினால் மிடைந்தவர்உலப்பு இலர்; தவத்தை மேவலால், மடந்தை ! நின்சேவடி வந்து நோக்கினேன். |
மடந்தை -அம்மையே;அடியனேன் - அடியவனான யான்; இராமன் ஆணையால் - இராமபிரானின் கட்டளையால்; அடைந்தனென் - இங்கு வந்து சேர்ந்தேன். உலகு அனைத்தையும் - எல்லா உலகங்களையும்; குடைந்து நாடும் - துருவி உன்னைத் தேடும்; கொட்பினால் - கருத்தினால்; மிடைந்தவர் - நெருங்கிப் புறப்பட்டவர்கள்; உலப்பிலர் - அளவற்றவர்கள்; தவத்தை மேவலால் - யான் தவப் பயனை அடைதலாலே; நின் சேவடி - உன்னுடைய திருவடியை; வந்து நோக்கினேன் - வந்து பார்த்தேன். கொட்பு -கருத்து. இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி (மணிமேகலை 21 - 76 -77 தவப்பயன் தவம் என்று பேசப் பெற்றது. காரியம் காரணமாக உபசரிக்கப் பெற்றது. (திருக்குறள் - உரை - 201) |