பக்கம் எண் :

352சுந்தர காண்டம்

தூய்மையைக் காட்டிற்று.ஆதலின் இவன் வினவுதற்கு உரியன் என்று பிராட்டி
முடிவு கட்டினாள். தக்காரைக் காணும்போது மனம் உருகுதல் இயற்கை.
அனுமன் இராமனைக் கண்டு உருகியதை நினைக்க. என்பு எனக்கு
உருகுகின்றது என்று அவன் பேசினான். நினைவு - வருத்தம். ‘நினைவின்
அகன்றான்’ என்னும் சிந்தாமணிக்கு (339) இனியர் வருத்தத்தின் நின்றும்
நீங்கினான் என்று விளக்கினார். நினைவு - ஆலோசனை. அனுமன்
ஆலோசித்துப் பேசினான் என்று பிராட்டி கருதியதாகவும் கொள்ளலாம்.
அனுமன் பேச்சு தற்கொலை கூடாது என்பதை நி்ரூபிக்கும் சொல்லாகவே
உள்ளது. புலன்கள் வெல்வது வீரம் என்பது இந்தியத் தொல் மரபு ஆதலின்
அனுமனை வீர என்று விளித்தாள்.                            (28)

அனுமன் தன் வரலாறுகூறல் 

5256.

ஆய சொல்தலைமேல் கொண்ட அங்கையன்,
                 ‘அன்னை ! நின்னைத்
தூயவன் பிரிந்தபின்பு தேடிய துணைவன்,
                  தொல்லைக்
காய் கதிர்ச்செல்வன் மைந்தன், கவிக்குலம்
                 அவற்றுக்கு எல்லாம்
நாயகன்,சுக்கிரீவன் என்று உளன், நவையின்
                  தீர்ந்தான்.

(பிராட்டி கூறிய)

     ஆய சொல் -அந்தச்சொல்லை; தலைமேல் கொண்ட - தலையின்
மீது ஏற்றுக்கொண்ட; அம்கையன் - அழகிய கைகளைப் பெற்ற அனுமன்;
அன்னை ! - தாயே; நின்னை - உன்னை; தூயவன் பிரிந்த பின்பு -
இராமன் பிரிந்த பிறகு; தேடிய துணைவன் - தேடிப் பெற்ற நண்பன்;
தொல்லை - பழமையான; காய்கதிர்ச் செல்வன் மைந்தன் - சூரியனின்
புதல்வன்; கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம் - எல்லாக் குரங்குக்
குலத்துக்கும்; நாயகன் - தலைவன்; நவையில் தீர்ந்தான் -
குற்றங்களிலிருந்து விலகியுள்ள; சுக்கிரீவன் என்று உளன் - சுக்கிரீவன்
என்று பேசப்பட்டு  ஒருவன் உள்ளான்.

     அனுமன்,பிராட்டியின் சொல்லையும் தன்கையையும் தலைமேற்
கொண்டான். சொல், அங்கை தலைமேற் கொண்டவன், என்க. விகுதி பிரித்துக்
கூட்டுக. (இங்ஙனம் கூறுவதே ஏற்புடைத்து) பிராட்டியின்