குரங்குகள்; எழுபதுவெள்ளம் கொண்ட - எழுபது வெள்ளம் என்னும்; எண்ணன - தொகையைப் பெற்றன; உலகம் எல்லாம் - எல்லா உலகங்களையும்; தழுவி நின்று எடுப்ப - அணைத்து நின்று சுமப்பன; வேலை - கடல்களை; தனித்தனி - பிறர் உதவியில்லாமல் தனித்தனியாக; கடக்கும் தாள - தாண்டும் பாதங்களை உடையன; குழுவின - கூடியிருப்பன; வானின் நீண்ட - ஆகாயம் போல் பரவியுள்ளன. எண்ணன, தாள,என்பன குறிப்பு முற்றுகள். அவை வானரம் என்னும் எழுவாய்க்கு உரியன. செய்தற்கு ஒத்த என்பதை எச்சம் ஆக்காமல் முற்றாக்கியும் கூறலாம். அப்போது ஒத்த என்பது ஒன்றுபட்டிருப்பன என்னும் பொருள் தரும். வெள்ளம் - பேரெண். (32) | 5260. | ‘துப்பு உறுபரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த ஒப்பு உறு நாகர்நாடும், உம்பர்நின்று இம்பர்காறும், இப் புறம் தேடிநின்னை எதிர்ந்திலஎன்னின், அண்டத்து அப் புறம்போயும் தேட, அவதியின் அமைந்து போன. |
(அவ்வானரங்கள்) துப்புஉறு -வலிமை மிக்க; பரவை ஏழும் - ஏழு கடல்களும்; சூழ்ந்த- சூழ்ந்துள்ள; பார் ஏழும் - ஏழு உலகங்களையும்; ஆழ்ந்த - கீழேஆழ்ந்திருக்கும்; ஒப்புறு - அழகுமிக்க; நாகர் நாடும் - நாகர் வாழும் பாதாள உலகமும்; உம்பர் நின்று - சுவர்க்க நாடு முதல்; இம்பர் காறும் - இவ்உலகம் வரையிலும்; இப்புறம் தேடி - இவ்வண்டத்திலே தேடிவிட்டு; நின்னை எதிர்ந்தில என்னின் - நின்னைக் காணவில்லை என்றால்; அண்டத்து அப்புறம் போயும் தேட - இந்த அண்டத்துக்கு அப்பாலும் தேட; அவதியின் - காலக் கெடுவுடன்; அமைந்து போன - உடன்பட்டுச் சென்றுள்ளன. எல்லாஉலகங்களையும் கால எல்லைக்குள் அவை தேடி முடிக்கும். அவதி - காலஎல்லை (காலக்கெடு) வானரங்கள் அண்டங் கடந்து செல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்பது குறிப்பு. இராவணன் பேசிய பேச்சுக்கு நச்சுமுறியாக அனுமன் வழங்கியவை அனைத்தும் பிராட்டிக்கு நம்பிக்கை ஊட்டுபவை. துப்பு - பவளம் என்றும் கூறலாம். ஒப்புற - அழகுமிக்க. ஒப்புடை ஒருவனை உருவழிய.... விழித்தவனே (சம்பந்தர் 262 -7 ) பார் என்றது கடல்களால் சூழப்பெற்ற நாவலந்தீவு முதலானவற்றை, நாடுகள் யாவும் கடலாற் சூழப் பெற்றவை அறிக. தீவுகளின் பெயரை, தீவு ஏழ் அவைதாம் நாவல், இறலி, குசை, கிரௌஞ்சம், |