பக்கம் எண் :

உருக் காட்டு படலம்361

எதிராக; உதிக்கும்சூரியன் - தோன்றும் நிலையில் உள்ள சூரியனின்;
இளங்கதிர் - இளமைப் பொலிவுடைய கதிர்கள்; ஒக்கினும் ஒக்கும் -
ஒத்தாலும் ஒத்திருக்கும்.

    கிடக்க, என்,என்பவை இகழ்ச்சியைக் குறிக்கும். சேனை கிடக்கிடு’
என்று குகன் பேசினான். ஏஏ, சீச்சீ எல்என் இகழ் மொழி’ என்று பிங்கலம்
பேசும் (பிங்கலம் 2105) விரல் பவளம்... ஒப்பாம் என்று உவமான சங்கிரகம்
பேசும் (74) ஒக்கினும் ஒக்கும் - ஒத்திருக்கும். இயங்கலும் இயங்கும்
மயங்கலும் மயங்கும் என்பது போல் வந்தது. (சிலம்பு 22 - 154) ஏந்திழை,
பெண் என்னும் பொருள் தந்தது. புனையா ஓவியம் போன்ற
மணிமேகலையைச் சாத்தனார் அணியிழை, ஆயிழை என்றார். இம்மரபு
உணராது இடர்ப்பட்டார் உளர். விரல் இளங்கதிர் என்றதனால் திருவடி
சூரியன் என்க. நம்மாழ்வார் ‘திருப்பாதம்’ இளநாயிறு இரண்டு போல் ஒளி
உள்ளவா (திருவாய் 8-5-5) என்றார். ஆழ்வார் நினைந்ததைக் கம்பர்
வரைந்தார்.                                               (40)

5268.

‘சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்துஉளஅல்ல; மற்று இனி;
எறி சுடர்வயிரமோ திரட்சி எய்தில;
அறிகிலென்,உகிர்க்கு, யான், உவமம் ஆவன.

     உகிர்க்கு -எம்பெருமான் விரல் நகத்துக்கு; திங்கள் - சந்திரன்;
சிறியவும் பெரியவும் ஆகி - சிறிய வடிவத்தையும் பெரிய வடிவத்தையும்
உடையதாய்; மறுவில - களங்கமில்லாதவையாய்; பத்து உள வல்ல - பத்து
இல்லை; சுடர் எறி - ஒளியை வீசும்; வயிரம் - வயிரங்கள்; திரட்சிஎய்தில
-
உருட்சியைப் பெறவில்லை; (ஆதலால்) யான் இனி - யான் மேலும்;
உவமம் ஆவன - உவமமாகப் பொருந்தக் கூடியனவற்றைச்; அறிகிலேன் -
சிந்திக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்.

     சந்திரன்,சிறிய வடிவத்தையும், பெரியவடிவத்தையும் பெற்றதாய்ப் பத்து
இல்லை. வயிரங்கள் திரட்சியைப் பெறவில்லை. பலவாக இல்லாததால்
திங்களும் திரட்சி எய்தாமையால் வயிரமும் உவமையாகும் பேற்றை இழந்தன.
உவமம் - ஒப்பு. மற்று - அசை. திங்களோ வயிரமோ - ‘ஓ’ அசை நிலை.
திருவே கொலோ (சிந்தா 639) என்பதில் உள்ள ஓகாரம் அசை என்றார்,
இனியர். அறிகிலேன் இதில் உள்ள இல் ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல்
ஆழ்வார் ஐம்புலன் வெல்லகில்லேன் என்றார் (திருவாய் 4-7-9)       (41)