| | ‘ஐய ! நீஅளப்ப அரும் அளக்கர் நீந்தினை எய்தியது எப்பரிசு ? இயம்புவாய் !’ என்றாள். |
நைஉறு சிந்தையள்- நைதல்பொருந்திய உள்ளத்தை உடைய பிராட்டி; நயன வாரியின் தொய்யல் - கண்ணீர்ப் பெருக்கின்; வெம் சுழியிடை - கொடிய சுழிகளுக்கு இடையே; சுழிக்கும் மேனியள் - சுழலும் மேனியை உடையவளாய்; (அனுமனை நோக்கி) ஐய ! - என் தந்தையே; நீ அளப்பரும் அளக்கர் - நீ அளவிட முடியாத கடலை; நீந்தனை எய்தியது - கடந்து வந்தது; எப்பரிசு - எந்த விதத்தால்; இயம்புவாய் என்றாள் - கூறுவாயாக என்று வினவினள். தொய்யல் -நீர்ப்பெருக்கு (அண்ணாமலை - பதி) உயர்வு நவிற்சியால் பிராட்டி கண்ணீர்ப் பெருக்கில் உண்டான சுழிகளில் தத்தளித்தாள். ‘கலங்கு தெண் திரையிற்றாய கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்’, (கம்ப. 6041) என்று அனுமன் பெருமான்பால் பேசுவான். கடற்சுழி பட்டவர் போல் பிராட்டி தத்தளித்தாள் என்க. (96) | 5324. | ‘சுருங்கு இடை ! உன் ஒரு துணைவன் தூய தாள் ஒருங்குடைஉணர்வினோர், ஓய்வு இல் மாயையின் பெருங் கடல்கடந்தனர் பெயரும் பெற்றிபோல், கருங் கடல்கடந்தனென், காலினால்’ என்றான். |
சுருங்கிடை -சுருங்கியஇடையை உடைய தாயே; உன் ஒரு துணைவன் - உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் - தூய திருவடியில்; ஒருங்கு அடை - ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர் - பேரறிவு பெற்ற ஞானிகள்; ஓய்வு இல் - ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல் - மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் - தாண்டி; பெயரும் பெற்றி போல் - நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் - கால்களால்; கருங்கடல் - கரிய கடலைக்; கடந்தனென் - கடந்து வந்தேன்; என்றான் - என்று கூறினான். கால் - பிராணசக்தி என்று கூறுவாரும் உளர். (97) | 5325. | ‘இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை; தத்தினை கடல்;அது, தவத்தின் ஆயதோ ? சித்தியின்இயன்றதோ ? செப்புவாய்’ என்றாள்- முத்தினும்,நிலவினும், முறுவல் முற்றினாள். |
|