பக்கம் எண் :

408சுந்தர காண்டம்

பேருரு  அடக்கப்பிராட்டி வேண்டுதல்.

5333.

வஞ்சிஅம்மருங்குல் அம் மறு இல் கற்பினாள்,
கஞ்சமும் புரைவனகழலும் கண்டிலாள்;
‘துஞ்சினர்அரக்கர்’ என்று உவக்கும் சூழ்ச்சியாள்,
‘அஞ்சினென் இவ்உரு; அடக்குவாய்’ என்றாள்.

     வஞ்சி அம்மருங்குல் - வஞ்சிக் கொடி போலும்இடையை உடைய;
அ - அந்த; மறு இல் கற்பினாள் - குற்றமற்ற கற்பை உடைய பிராட்டி;
கஞ்சம் புரைவன - தாமரை மலரை ஒத்தனவான; கழலும் - (அனுமனின்)
திருவடிகளையும்; கண்டிலள் - கண்டாள் இல்லை (அவள்); அரக்கர் -
அரக்கர்கள்; துஞ்சினர் - (இவனால்) இறந்தவராவார்; என்று உவக்கும் -
என்று மகிழ்ச்சியடையும்; சூழ்ச்சியாள் - எண்ணத்தை உடையவளாய்;
(அனுமனை நோக்கி) இவ் உரு - இந்த உருவத்தைக் கண்டு; அஞ்சினென் -
அடக்கிக் கொள்க; என்றாள் - என்று கேட்டுக் கொண்டாள்.

     அனுமனின்பேருருவின் மாட்சியை வி்ளக்கக், கழலும் கண்டிலள்
என்றான் கவிச்சக்கரவர்த்தி. கஞ்சமும் என்பதில் உள்ள ‘உம்’ அசை. கஞ்சம்
புரைவன என்க. களிறு சென்று களன் அகற்றவும் (புறம் 26)         (106)

5334.

‘முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழு இலது உலகு;இனி, குறுகுவாய்’ என்றாள்,-
எழுவினும் எழில்இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினளாம் என,தளிர்க்கும் சிந்தையாள்.

     எழுவினும் எழில்இலங்கு - கணைய மரத்தினும் அழகு விளங்கும்;
இராமன் தோள்களை - இராமபிரானின் தோள்களை;  தழுவினள் ஆம்
என -
அணைத்தவள் ஆவாள் என்று கூறும்படி; தளிர்க்கும் - பூரிக்கின்ற;
சிந்தை - மனம் உடைய பிராட்டி (அனுமனை நோக்கி); இவ் உரு முழுவதும்
காண -
இந்த வடிவம் முழுவதையும் பார்ப்பதற்கு; உலகு முற்றிய - உலகம்
முதிர்ச்சி பெற்ற; குழு இலது - கூட்டம் உடையதாக இல்லை (ஆகையால்);
இனி - இப்போது; குறுகுவாய் - ஒடுங்குவாயாக; என்றாள் - என்று
கூறினாள்.