என்று முன்பு அனுமன்புகழப் பெற்றான். (அனுமப் படலம் 29) இங்கு நீயே எம்கோன் துணையானால் என்று பிராட்டி பேசினாள். தருமமே இராமன் என அறிக. அறத்தின் மூர்த்தி இராமன் என்று கம்பர் உணர்ந்தனர். மயங்கலும் மயங்கும் என்று சிலம்பு பேசும் (22-154) உயிர் உயிர்த்தேன் என்பதும் அது போன்றது. உயிர்த்தேன் என்பதே பொருள். அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். (112) | 5340. | ‘மாண்டேன்எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச் சிறைநின்றும் மீண்டேன்;என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும் வேர் அறுத்தேன், பூண்டேன் எம்கோன் பொலங் கழலும்; புகழே அன்றி, புன் பழியும் தீண்டேன்’என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள். |
திருவின்முகத்துத் திரு அன்னாள் - திருமகளின் முகத்தில் உள்ள செல்வம் போலும் பிராட்டி (அனுமனை நோக்கி); இன்றே - இன்றைய தினமே; மாயச்சிறை நின்றும் - மாயை போன்ற சிறையிலிருந்து; மீண்டேன் - திரும்பியவள் போன்றுள்ளேன்; என்னை ஒறுத்தாரை - என்னைத் துன்புறுத்திய அரக்கர்களை; குலங்களோடு - அவர்களுடைய சுற்றங்களுடன்; வேர் அறுத்தேன் - அடியோடு தொலைத்து விட்டவள் ஆவேன்; எம் கோன் - எம்பிரானாகிய இராமபிரானின்; பொலங்கழலும் - வீரக் கழல் அணிந்த திருவடியை; பூண்டேன் - தலையில் சுமந்தவள் ஆனேன்; புகழே அன்றி - புகழையே அல்லாமல்; புன் பழியும் - அற்பப் பழிச் சொல்லையும்; தீண்டேன் - தீண்டமாட்டேன் (ஆகையால்) (இனி); மாண்டேன் எனினும் - இறந்துபட்டாலும்; பழுது அன்று - (என் ஆன்மாவுக்குக்) குறைவு இல்லை; என்று - என்று கூறி; மகிழ்வுற்றாள் - மகிழ்ச்சியடைந்தாள். மாயச்சிறை -மாயைபோலும் சிறை. திருவின் முகத்துத் திரு - என்ற தொடர் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை அடிப்படையாகக் கொண்டது. திருவுக்கும் திருவாகிய செல்வா (7.7.1) என்பது பெரிய திருமொழி. திருமாலின் சாரம் திருமகள்; திருமகளின் சாரம் சிறையிருந்த செல்வி என்க. திருமகள் அருளுடையவள். பிராட்டி அருளே வடிவமானவள். என்பது குறி்ப்பு. அருளது சக்தி என்று சித்தி பேசும். சக்தி - சாரம். (113) |