முடிவற்ற; அரக்கர்குலம் - இராக்கதர் கூட்டம்; அற்று அவிய நூறி - சிதைந்து அழியக் கொன்று; நந்தல் இல் - அழிவற்ற; புவிக்கண் இடர் - பூமியின்கண்ணே துன்பத்தை; களைதல் நன்று - களைந்தெடுப்பது சிறப்பானதாகும். பிராட்டி தான்சிறைமீட்சி பெற்றால் இராவணனை அழிப்பது நிகழாதே என்று கருதுவதாக முடிவுகட்டி, அனுமன், நீயும் இராமபிரானிடம் திரும்பி வந்து இராவணனை அழிக்கலாம் என்று கூறினான். இவண் ஏகி என்பதற்கு இந்த இலங்கையிலே பெருமானும் தேவரீரும் திரும்பி எழுந்தருளி என்பது பழைய வுரை (அடை-பதி) செயலற்ற சிவம் சத்தியுடன் சேரின் எத்தொழிலும் வல்லது என்று சௌந்தரிய லகரி பேசும். (சௌந்தரிய7) அவண் எய்தி..... தெளிவோடும் என்னும் பாடத்திற்கு யான் உன்னுடன் இராமபிரான் இருக்குமிடத்தை அடைய, அதனால் அவன் தெளிவு பெற்று, எனப் பொருள் கொள்ள வேண்டும். எய்தி என்னும் செய்து என்னும் வாய்ப்பாட்டுச் சொல் செய என்னும் வாய்பாட்டுப் பொருளில் வந்ததாகக் கொள்ள வேண்டும். (9) | 5354. | ‘வேறு இனிவிளம்ப உளதன்று; விதியால், இப் பேறு பெற,என்கண் அருள் தந்தருளு; பின் போய் ஆறு துயர்; அம்சொல் இள வஞ்சி ! அடியேன் தோள் ஏறு, கடிது,‘என்று, தொழுது இன் அடி பணிந்தான். |
அம் சொல்இளவஞ்சி ! - அழகிய சொற்களைப்பேசும் இளங்கொடி போல்வாய் ! இனி - இப்போது; விளம்ப -கூறுவதற்கு; வேறு உளது அன்று - வேறுமொழிகள் இல்லை; இப்பேறு - இந்தப் பாக்கியத்தை; விதியால் பெற - முறைப்படி அடியேன் பெறுவதற்கு; என்கண் - அடியேன்பால்; அருள் தந்தருளு - திருவருளை வழங்கியருள்; பின் - அதற்குப்பின்; போய் - இராமபிரான் பக்கலில் போய்; துயர் ஆறு - துன்பத்தைத் தணிப்பாயாக. (அதன் பொருட்டு); அடியேன் தோள் கடிது ஏறு - அடியேனுடைய தோளில் விரைந்து ஆரோகணிப்பாயாக; என்று தொழுது - என்று கூறிப் பணிந்து; இன் அடி - நன்மைதரும் திருவடிகளை; பணிந்தான் - வணங்கினான். இன்அடி - நன்மைதரும் திருவடி. ‘இனிய சிந்தை இராமன்’ (கம்ப. 3061) ‘சிந்திப்பவர்க்கு ..... செந்தேன் முந்திப் பொழிவன... அடித்தலம்’ என்று அப்பர் பேசுவர். அதை ஒட்டி இனியதிருவடி என்றும் பொருள் கொள்ளலாம். விதி - முறை. (10) |