பக்கம் எண் :

சூடாமணிப் படலம்427

பெற்ற; பெண்மையால் - பெண்மைத் தன்மையால்; அது - அச்செயல்;
உரியது அன்று என - ஏற்ற செயல் அன்று என்று; ஓர்கின்றது - அறியும்
பண்பு; உண்டு - என்பால் உள்ளது.

     அனுமன் ஆற்றலுக்குஏற்ற அனைத்தும் செய்வான். ஆனால் பெண்மை
இடையே தடை விதிக்கிறது. பெரிய பேதைமை, சின்மதி என்பவை
பிராட்டியின் அடக்கத்தால் வந்த மொழிகள். பிறரின் அறியாமையைத் தன்
அறியாமையாகக் கூறிக் குறிப்பிக்கும் பாங்கு எதிர்மறைத் தொனியைச்
சார்ந்தது. அவன் பெரியவன் என்ற தொடர் திரும்பத் திரும்பப் பேசப்பட்டு
அது வேறு பொருள் பயந்தது, என்பதைச் சீசர் நாடகத்திற் காண்க. செய்வதும்
செய்தி - என்பது செய்தலைச் செய்வாய் என்னும் பொருள் தந்தது.
‘உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்’ கலித்தொகை பேசும். (பாலை 22)
மயிலைநாதர், இவற்றை ஒருபொருட்பன்மொழி என்பர். இனியர் காரிய வாசகம்
என்பர் (தொல் 113) செய்தலும் செய்தியே என்பதற்கு இ.கோ.பிள்ளை
அவர்கள் செய்தாலும் செய்வாய் - என்று விரித்தார். இன்று படித்தாலும்
படித்தேன். இதுபோல் படித்தாலும் படித்தேன். இதுபோல் படித்ததில்லை
என்பன போன்ற உலக வழக்கு இங்கே தோன்றுகிறது.              (12)

5357.

‘வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம்அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய் !

(அனுமனே !) (நீஎன்னைச் சுமந்து போகும் போது)

      வெய்யவர் -கொடிய அரக்கர்கள்; வேலையின் இடையே வந்து -
கடலுக்கு நடுவே வந்து; கோலி - உன்னை வளைத்துக் கொண்டு;
நின்னொடும் - உன்னுடன்; வெம்சரம் கோத்தபோது - கொடிய அம்புகளை
வில்லில் தொடுத்துப் போர் புரியும்போது; ஆலம் அன்னவர்க்கு அல்லை -
விடம் போன்றவர்களுடன் போர் புரிவதற்கும் ஏற்றவனாகாய்; எற்கு அல்லை
-
என்னைப் பாதுகாப்பதற்கும் உரியவனாகாய்; சாலவும் - மிகவும்; தடுமாறும்
-
(எதைச் செய்வது எதைத்தவிர்ப்பது என்று) சஞ்சலம் அடையும்;
தனிமையோய் - தனிமை உடையவனாவாய்.

     அரக்கருடன்போர் செய்தால் என்னைப் பாதுகாக்க இயலாது. என்னைப்
பாதுகாத்தால் அரக்கர்களால் பேரிடர் உண்டாகும். ஆகையால் உன் எண்ணம்
முறையன்று என்று பிராட்டி பேசினாள்.