பக்கம் எண் :

430சுந்தர காண்டம்

5361.

‘பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும்,ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?

     பொற்பிறங்கல்இலங்கை - பொன்மலையில் அமைந்தஇலங்கை
மாநகரம்; பொருந்தலர் - அறத்துடன் பொருந்தாத அரக்கர்களின்; என்பு
மால்வரை ஆகிலதே எனின் -
பெரிய எலும்பு மலையாக ஆகாமற்
போனால்; யான் - நான்; இற்பிறப்பும் - என்னுடைய சிறந்த
குடிப்பிறப்பையும்; ஒழுக்கும் - ஒழுக்கத்தையும்; இழுக்கம் இல் கற்பும் -
சிதைவு இல்லாத கற்பையும்; பிறர்க்கு - உலக மக்களுக்கு; எங்ஙனம்
காட்டுகேன் -
எப்படித் தெளிவுபடுத்தி அறிவிப்பேன்.

     மேருமலையிலிருந்துவாயு தேவனால் வீசி எறியப்பட்ட திரிகூட
மலையில் இலங்கை அமையப் பெற்றது. ஆதலின் பொற்பிறங்கல் இலங்கை
என்று பேசப்பட்டது. மேருமலையைப் பொன்மலை என்பது மரபு. ‘கற்புடைத்
தேவியை விடாது காத்தியேல் எற்புடைக் குன்றமாம் இலங்கை’ என்று
வீடணன் கூறியதாக மயிந்தன் பேசினான் இ.கோ. பிள்ளை அவர்கள் பொற்
பிறங்கல் இலங்கை என்பதற்கு பொன் மலையான இலங்கை என்று உரை
வகுத்தார். ‘இலங்கை வெற்பு’ என்று பேசப்படுகிறது. (கம்ப. 6035) அவர்,
பொன்மலை எலும்புமலையாக வேணும் என்றபடி என்று எழுதினார்.    (17)

5362.

‘அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

     அல்லல் -(எலும்புமலையாகப் போகும்) துன்பம்; மாக்கள் - விலங்கு
போன்றவர்கள் வாழும்; இலங்கையது ஆகுமோ - இலங்கையளவுடன் நின்று
விடுமா; எல்லை நீத்த - (அறத்தின்) வரம்பைக் கடந்து போகும்; உலகங்கள்
யாவும் -
எல்லாவுலகங்களையும்; என் சொல்லினால் - என்னுடைய
சொல்லினாலேயே; சுடுவேன் - சுட்டெரித்து விடுவேன்; அது - அவ்வாறு
செய்வது; தூயவன் - தூயவனாகிய இராமபிரானின்; வில்லின் ஆற்றற்கு -
வில்லினுடைய வலிமைக்கு; மாசு என்று - களங்கம் உண்டாக்கும் என்று
(அதை); வீசினேன் - ஒதுக்கித் தள்ளினேன்.