இ.கோ.பிள்ளைஅவர்கள் பெண்ணால் வெற்றி பெறுவது ஆண் பிள்ளைக்குப் புகழன்று என்று கருத்துரை வரைந்தார் சிந்தாமணி (1752) இக் கருத்தைப் பேசும். அல்லல், இலங்கையது ஆகுமோ என்று சேர்க்க. அல்லல் இலங்கைக்கு அடைமொழியாகப் பேசிய உரையே அதிகம். அல்லல் எழுவாயாகக் கொள்ளும் உரை என் தந்தையார் கூறியவுரை. இ.கோ.பிள்ளை அவர்கள், அல்லல் என்பதை மாக்கட்கு அடைமொழி ஆக்கினும், தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அளவில் முடிவு பெறுமோ அல்லவா என்று எழுதினார். (18) | 5363. | ‘வேறும் உண்டு உரை;கேள் அது; மெய்ம்மையோய் ! ஏறு சேவகன் மேனிஅல்லால், இடை ஆறும் ஐம்பொறிநின்னையும், “ஆண்” எனக் கூறும்; இவ் உருத்தீண்டுதல் கூடுமோ ? |
மெய்ம்மையோய்- உண்மையின் வடிவமானவளே; உரை வேறும் உண்டு - (இவை தவிர) சொல்லும் சொல் வேறு ஒன்றும் உள்ளது; அது கேள் - அதைக் கேட்பாயாக; ஏறு சேவகன் - வளரும் வீரத்தைப் பெற்ற இராமபிரானின்; மேனி அல்லால் - திருமேனியை அல்லாமல்; இடை - (உன்னுடைய விரதங்களால்) தோற்றுப்போய்; ஆறும் - அவிந்துபோன; ஐம்பொறி நின்னையும் - ஐம் பொறிகளைப் பெற்ற உன்னையும்; (இந்த உலகம்) ஆண் எனக் கூறும் - ஆண் என்று பேசும்; (ஆதலின்) இவ் உரு - இந்த மேனியை; தீண்டுதல் கூடுமோ - தொடுவது தகுமா. அனுமனே நீபிரம்மசரிய விரதத்தால் ஐந்து பொறிகளையும் அடக்கியுள்ளாய். அதனால், நீ, ஆண்பால் பெண்பால் என்னும் பகுப்பைக் கடந்தவனாவாய். ஆனால் உலகம் உன்னை ஆண் என்று கூறுகிறது. ஆதலின் உன் மேனியைத் தீண்டுவது தகாது. குறிக்கோளே அன்றி, அதை அடையும் நெறியும் தூய்மையாக இருத்தல் வேண்டும். என்று கூறும் காந்தியடிகளே அம்மையைப் பூரணமாக அறிவர். பிராட்டி, தன் மொழியால் அனுமன் மனம் வருந்துவானோ என்று தயங்கி தயங்கிப் பேசுவதைக் கவிதை நடையிற் காணலாம். (19) | 5364. | ‘தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல் ஈண்டுமோ உயிர்மெய்யின் ? “இமைப்பின்முன் மாண்டுதீர்வென்” என்றே, நிலம் வன் கையால் கீண்டு கொண்டு,எழுந்து ஏகினன், கீழ்மையான். |
|