பக்கம் எண் :

சூடாமணிப் படலம்435

5369.

‘தீர்விலேன், இது ஒரு பகலும்; சிலை
வீரன் மேனியைமானும் இவ் வீங்கு நீர்
நார நாள்மலர்ப்பொய்கையை நண்ணுவேன்,
சோரும் ஆர்உயிர் காக்கும் துணிவினால்.

     சோரும் -தளர்ச்சியடையும்; ஆர் உயிர் - அருமையான உயிரை;
காக்கும் துணிவினால் -
பாதுகாக்க வேண்டும் என்னும் உறுதிப் பாட்டால்;
சிலைவீரன் மேனியை மானும் -
கோதண்டபாணியை ஒத்திருப்பதும்; வீங்கு
நீர் -
பூரிக்கும் இயல்பைப் பெற்றிருப்பதும்; நாரம் நாண்மலர் -
தண்ணீரையும் மலரையும் கொண்டிருப்பதும்; (ஆகிய) இப்பொய்கையை -
இந்தத் தடாகத்தை; நண்ணுவேன் - அடைவேன்; ஒரு பகலும் - ஒரு
நாளும்; இது தீர்விலேன் - இச் செயலிலிருந்து விலகேன்.

     பொய்கையைப்பார்ப்பதால் உயிர்களிக்கும் என்பது குறிப்பு. மாயக்
கூத்தா.... தாமரை நீள் வாசத்தடம்போல் வருவானே ஒரு நாள் காண
வாராயோ என்னும் திருவாய்மொழி (8.6.1) இங்கு நினைவுக்கு வருகிறது. நாரம்
- தண்ணீர். இறைவனைப் பொய்கையாகக் கூறுவது தமிழ் மரபு. பைங்குவளைக்
கார்மலரைப் பார்த்துத் தெளிக.  (திருவெம்பாவை) தசரதன் பெற்ற மரகத
மணித் தடத்தினையே (10.9.8) என்னும் திருவாய்மொழி அதை உறுதிப்
படுத்தும். தீர்விலேன் என்பதற்குப் பர்ண சாலையினின்றும் நீங்கேன் என்று
கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க.                            (25)

5370.

‘ஆதலான், அது காரியம் அன்று; ஐய !
வேதநாயகன்பால், இனி, மீண்டனை
போதல்காரியம்’ என்றனள் பூவை; அக்
கோது இலானும்,இனையன கூறினான்;

     ஐய - ஐயனே; ஆதலால்- ஆகையாலே; அது - (என்னைச் சுமந்து
போக எண்ணிய) செயல்; காரியம் அன்று - செய்யத் தக்கது அன்று; இனி -
இப்போது;  வேத நாயகன் பால் - வேதத்தின் தலைவனான இராமபிரான்
பக்கலில்; மீண்டனை போதல் - திரும்பிச் செல்வது; காரியம் என்றனள் -
செய்யத் தக்கது என்று கூறினாள்; பூவை - பிராட்டி; அக்கோது இலானும் -
குற்றம் இல்லாத அந்த அனுமன்; இனையன கூறினான் - இந்த
வார்த்தையைக் கூறினான்.