பக்கம் எண் :

454சுந்தர காண்டம்

5399.

‘சூல் இரும் பெரு வயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலிஅம்கண்ணியர் அறுத்து நீத்தன,
வாலியும் கடப்பஅரு வனப்ப, வான் உயர்
தாலி அம் பெருமலை தயங்கக் காண்டியால்.

(அம்மையே)

     சோர்வுறும் -சிந்துகின்ற; ஆலி கண்ணியர் - நீர்த்துளிகளுடன்
கூடிய கண்களை உடைய அரக்கிமார்கள்; சூல் - கருக் கொண்டாற் போன்ற;
இரும் பெருவயிறு அலைத்து -
மிகப் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு;
அறுத்து நீத்தன -
அறுத்து ஒதுக்கியனவும்; வாலியும் கடப்ப அரு -
வாலியாலும் தாண்ட முடியாத; வனப்ப - தோற்றத்தை உடையனவும் (ஆகிய);
வான் உயர் -
வானம் அளாவிய; தாலி பெரு மலை - தாலியாகிய மலை;
தயங்கக் காண்டி -
விளங்குவதைப் பார்ப்பாயாக.

     சூல் - கரு.இயல்பாக உள்ள பெருவயிறு சூல் கொண்டாற்போல்
இருக்கும். ஆலி - நீர்த்துளி. அறுத்து நீத்தனவும், வாலியாலும் கடக்கவியலாத
தோற்றத்தை உடையனவும் ஆகிய தாலிமலை. சூல் - முட்டை போன்று
உருண்டு பருத்திருக்கும்வயிறு. மழைச் சூல் உடும்பு பெரும்பாண் 132)
ஆலியம் கண்ணினர், தாலியம் பெருமலை என்பனவற்றில் உள்ள ‘அம்’
சாரியை. காண்டியால் - இதில் உள்ள ஆல் அசை. இதனால் அரக்கர்கள்
அழிவர். உறுதி. உனக்கும், உலகுக்கும் நல்ல காலம் வரும் என்பது
குறிக்கப்பெறுகிறது.                                            (55)

5400.

‘விண்ணின்நீளிய நெடுங் கழுதும், வெஞ் சிறை
எண்ணின் நீளியபெரும் பறவை ஈட்டமும்,
புண்ணின் நீர்ப்புணரியில் படிந்து, பூவையர்
கண்ணின் நீர்ஆற்றினில் குளிப்பக் காண்டியால்.

     விண்ணின் -ஆகாயத்தைப் போல; நீளிய - நீண்ட; நெடுங் கழுதும்
-
பெரிய பேய்களும்; வெஞ்சிறை - கொடிய சிறகைப் பெற்ற; எண்ணின்
நீளிய -
எண்ணத் தொடங்கில் முடிவற்றிருக்கின்ற; பெரும் பறவை ஈட்
டமும்-
பெரிய பறவைக் கூட்டமும்; புண்ணின் - அரக்கர்களின்
புண்ணிலிருந்துவரும்; நீர்ப்புணரியில் - இரத்தக் கடலில்; படிந்து -
நீராடிவிட்டு (பிறகு);பூவையர் - மகளிரின்; கண்ணின் - கண்களில் வடியும்;
நீர் ஆற்றினில் -கண்ணீராகிய ஆற்றிலே; குளிப்பக் காண்டி -
நீராடுதலைப் பார்ப்பாயாக.