அவ்வாறு வந்தால்;துப்பு உற முருக்கி உயிர் உண்பல் - எனது வலிமையைக் கொண்டு அவர்களை அழித்து, உயிர்களை வாங்குவேன்; இது சூது - இதுவே யான் செய்யத்தக்க உபாயம். அரக்கரைப்போருக்கு அழைக்கும் உபாயத்தை உறுதிப் படுத்திக் கொண்டான் அனுமன். சூது - உபாயம். ‘சூது என்று கனவும் சூதும் செய்யாதே ! திருவாய்மொழி (2.10.10) துப்பு - வலிமை; ‘துப்புடையாரை’ - பெரியாழ்வார் திருமொழி (423) (6) 5435. | ‘வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால், வெந் திறல்அரக்கனும், விலக்க அரு வலத்தால் முந்தும்; எனின்,அன்னவன் முடித் தலை முசித்து, என் சிந்தை உறு வெந்துயர் தவிர்த்து, இனிது செல்வேன்.’ |
வந்தவர்கள்வந்தவர்கள் - என்னை எதிர்த்துப்போர் செய்ய வந்தவர்கள் எல்லாரும்; மீள்கிலர் மடிந்தால் - திரும்பிச் செல்லாதவர்களாய் இறந்தால்; வெம்திறல் அரக்கனும் - கொடிய வலியனான இராவணனும்; விலக்க அருவத்தால் - விலக்க முடியாத வலிமையோடு; முந்தும் - என் மீது போருக்கு வருவான்; எனில் - அவ்வாறு வந்தானானால்; அன்னவன் முடித்தலை முசித்து - இந்த இராவணனது, மகுடம் அணிந்த தலைகளை அழித்துக் கொன்று; என் சிந்தை உறு வெம்துயர் தவிர்த்து - என் மனத்தில் உள்ள கொடிய துயரைப் போக்கி; இனிது செல்வேன் - மகிழ்வோடு திரும்பிப் போவேன். முடிகள் அரசாங்கத்துக்கு உரியன. அவற்றை வீழ்த்துவதே அரக்கனைக் கொள்வதற்குச் சமம் இங்கே முடியோடு கூடிய தலையை நசுக்கிக் கொல்லுதலை ‘முடித்தலை முசித்து’ என்றார். சிந்தையுறு வெந்துயர் என்றது இதுவரையில் பிராட்டிக்குக் கேடு சூழ்ந்த அரக்கன் உயிரோடு இருக்கிறானே என்ற உணர்வைச் சுட்டியது. (7) அனுமன் அசோகவனத்தை அழித்தல் 5436. | என்றுநினையா, இரவி சந்திரன் இயங்கும் குன்றம் இருதோள் அனைய தன் உருவு கொண்டான்; |
|