ஆர்கலிகள்(கடல்கள்) தேவருலகில் உள்ள பூம் பொய்கை போல் விளங்கின. கடல்களில் விழுந்த மலர்த்தொகையின் மிகுதி உணர்த்தப்பெறுகின்றது. ஆவி - பொய்கை. அம்மா; வியப்பு இடைச்சொல். (17) | 5446. | இடந்த மணிவேதியும், இறுத்த கடி காவும், தொடர்ந்தனதுரந்தன படிந்து, நெறி தூர, கடந்து செலவுஎன்பது கடந்தது, இரு காலால் நடந்து செலல்ஆகும் எனல் ஆகியது, நல் நீர். |
இடந்த மணிவேதியும் - (அனுமன்)பெயர்த்தெறிந்த இரத்தினமயமானமேடைகளும்; இறுத்த கடிகாவும் - ஒடித்த காவலுள்ள சோபையின்மரங்களும்; தொடர்ந்தன தரந்தன - தொடர்ந்து வேகமாகச் சென்று; படிந்து,நெறிதூர - கடலிலே ஒழுங்காக விழுந்து, அதனை வழிபோலத் தூர்த்துவிட்டதனால்; நல்நீர் - மணம் கொண்ட கடலானது; கடந்து செலவு கடந்தது- தாண்டிச் செல்ல வேண்டியது என்ற தன்மையைக் கடந்ததாகி; நடந்துசெலல் ஆகும் எனல் ஆகியது - நடந்து செல்லக் கூடியது என்றுசொல்லத்தக்கதாயிற்று. அனுமன் இலங்கைவரும் போது, கடல் கடப்பதற்குரியதாக இருந்தது. திரும்பும் போது அது, நடப்பதற்குரியதாயிற்று. (18) | 5447. | வேனில்விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் வானினிடை வீசியஅரும் பணை மரத்தால், தானவர்கள்மாளிகை தகர்ந்து பொடி ஆய- வான இடியால்ஒடியும் மால் வரைகள் மான. |
வேனில் விளையாடுசுடரோனின் - கோடைக்காலத்தில் முழு உற்சாகத்தோடு காய்கின்ற சூரியனைப் போல; ஒளி விம்மும் வானின் இடை - ஒளி மிகுகின்ற ஆகாயத்தில்; வீசிய இரும்பணை மரத்தால் - (அனுமன்) வீசி எறிந்த மிகப் பெரிய மரங்களால்; தானவர்கள் மாளிகை - அரக்கரது மாளிகைகள்; வான இடியால் ஒடியும் மால் வரைகள் மான - ஆகாயத்திலிருந்து விழும் இடியினால் உடைந்த பெரிய மலைகளைப் போல்; தகர்ந்து பொடியான - இடிந்து பொடிபட்டன. மரங்களால்தாக்குண்டு விழுந்த அரக்கர் மாளிகைகளுக்கு, இடிகளால் தாக்குண்டு அழியும் மலை ஒப்பு. உவமை அணி. (19) |