இது யமக அணியாய்அமைந்தது. (31) | 5460. | வண்டுஅலம்பு நல் ஆற்றின் மராமரம், வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; விண்டு அலம்புகம் நீங்கிய வெண் புனல், விண்தலம் புகநீள் மரம், வீழ்ந்தவே. |
வண்டு அலம்பு நல்ஆற்றின் மராமரம் - வண்டுகள் ஒலிக்கும்படியான, அழகிய சாலையிலிருந்த ஆச்சா மரங்கள்; வண்டல் அம்புனல் ஆற்றின் மடிந்தன - வண்டலைக் கொண்ட அழகிய நீர் நிறைந்த ஆற்றில் போய் விழுந்து அழுந்தின; விண் தலம் புக நீள் மரம் - வான் அளவு உயர்ந்து வளர்ந்த வேறு சில மரங்கள்; விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல் வீழ்ந்த - திருமாலின் திருவடிகளைப் பிரம தேவன் கழுவியதனால் தோன்றி வானத்தினின்றும் பூமியை நோக்கி இறங்கி வந்த வெள்ளிய நீரை உடைய ஆகாச கங்கையாற்றிலே வீழ்ந்தன. விண்டு - விஷ்ணு;(திருமால்) கம் - ஆகாயம்; இதுவும் யமக அணி. வெண் புனல் - கங்கை; அதனால், ‘ஆறு’ என்பது காவிரியைக் குறிக்கிறது என்பாரும் உளர். இதுமுதல் (5460 - 5463) முடிய முன் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் ஒருவகையாகவும் பின் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் வேறுவகையாகவும் மடக்கி வந்து, யமக அணி பொருந்தப் பெற்றிருப்பது காண்க. (32) | 5461. | தாமரைத்தடம் பொய்கை, செஞ் சந்தனம்- தாம் அரைத்தனஒத்த; துகைத்தலின், காமரம் களிவண்டொடும், கள்ளொடும், காமர் அக்கடல், பூக் கடல் கண்டவே. |
உகைத்தலின் -அனுமன்பலவகை மரங்களை வீசி எறிந்ததனால்; தாமரை தடம் பொய்கை - தாமரை மலர்கள் நிறைந்த பெரிய தடாகம்; செம்சந்தனம் தாம் அரைத்தன ஒத்தது - சிவந்த சந்தனக்கட்டையை அரைத்துக்கரைக்கப்பட்டன போல் தோன்றிற்று; காமரம் - (அன்றியும்) சோலையின்மரங்கள்; காமர் அம் கடல் - தாம் வீழப் பெற்ற அழகிய அந்த உவர்க்கடலை; காமரம் களி வண்டொடும் கள்ளொடும் - காமரம் என்னும் பண்பாடிக் களிக்கும் வண்டுகளோடும் தேனோடும் கூடி; பூக் கடல் கண்ட - மலர்களால் இயன்ற கடலாகச் செய்தன. |