பக்கம் எண் :

492சுந்தர காண்டம்

5464.

புல்லும் பொன் பணைப் பல் மணிப் பொன் மரம்,
‘கொல்லும் இப்பொழுதே’ எனும் கொள்கையால்,
எல்லில் இட்டுவிளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன,விண் உற வீசின.

     விண் உற வீசின- (அனுமனால்) ஆகாயத்தில் சேருமாறு வீசி
எறியப்பட்டனவும்; பொன் பணை புல்லும் - பொற் கிளைகள் பொருந்தப்
பெற்றனவும்; பல் மணி பொன் மரம் - பல வகை இரத்தினங்களால் இயன்று
அழகு பொருந்தியனவுமாகிய மரங்கள்; இப்பொழுதே கொல்லும் எனும்
கொள்கையால் -
இந்த அனுமன் இப்பொழுதே இலங்கையை அழித்து
விடுவான் என்ற குறிப்பால்; எல்லில் இட்டு விளக்கிய - இரவு நேரத்தில்
(உத்பாதமாக) உண்டாக்கி விளங்கச் செய்த; இந்திரன் வில்லும் ஒத்தன -
வானவில்லைப் போன்றன ஆயின.

     இரவில் வானவில்தோன்றுவது. அழிவின் அறிகுறி. அனுமன் வீசி
எறிந்த மரங்கள் இந்திர வில் போன்று ஒளி விட்டு விளங்கின. எல் - இரவு.
இந்திரவில் - வானவில்.                                        (36)

5465.

ஆனைத்தானமும், ஆடல் அரங்கமும்,
பானத் தானமும்,பாய் பரிப் பந்தியும்,
ஏனைத் தார் அணிதேரொடும் இற்றன-
கானத்து ஆர் தருஅண்ணல் கடாவவே.

     அண்ணல் -பெரியோனான அனுமன்; கானத்து ஆர் தரு கடாவ -
அசோகவனத்தில் நிறைந்துள்ள மரங்களை (வேரோடு பிடுங்கி) வீசி எறிய;
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் - (அதனால்) யானைகளைக்
கட்டியுள்ள இடங்களும் நடன சாலைகளும்; பானத் தானமும் - மதுபானம்
செய்யும் இடங்களும்; பாய் பரிப் பந்தியும் - பாய்ந்து ஓடும் இயல்பினவான
குதிரைகள் கட்டும் இடங்களும்; ஏனை தார் அணி தேரொடும் இற்றன -
மற்றைய, சிறு மணிகள் கட்டப்பெற்ற தேரோடும் முறிந்து ஒழிந்தன.
அரங்கம் -நடனசாலை.                                      (37)

5466.

மயக்கு இல்பொன் குல வல்லிகள், வாரி நேர்
இயக்குறத்திசைதோறும் எறிந்தன,