பக்கம் எண் :

496சுந்தர காண்டம்

காலை ஊன்றிஎழுந்தபோது நிகழ்ந்த செய்திகளோடு (4758 - 4762; குறிப்பாக
4759) ஒப்பிடுக.                                         (42)

5471.

தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும்
                        தொடுத்த புள் தம்
கூட்டொடும்துறக்கம் புக்க, குன்று எனக் குவவுத்
                        திண் தோள்
சேட்டு அகன்பரிதி மார்பன் சீறியும்
                        தீண்டல்தன்னால்;
மீட்டு, அவன்கருணைசெய்தால், பெறும் பதம்
                        விளம்பலாமோ ?

     குன்று எனக்குவவுத் திண்தோள் - மலை போன்று திரண்ட
தோள்களை உடைய; சேடு அகல் பிரிதி மார்பன் - அழகினால் பரந்து
சூரியன் போன்ற மார்பை உடைய அனுமன்; சீறியும் தீண்டல் தன்னால் -
கோபித்த போதும் தன் கைகளால் தொட்ட சிறப்பினால்; தெய்வ மரம்
தொறும் -
அங்கிருந்த தெய்வத் தன்மை வாய்ந்த மரங்களில் எல்லாம்;
தோட்டொடும் துதைந்த தம் கூட்டொடும் - இலைகளோடு
நெருங்கியனவாய்த் தொகுத்து அமைக்கப் பெற்ற தமது கூடுகளுடன்; புள்
துறக்கம் புக்க -
பறவைகள் சுவர்க்கம் போய்ச் சேர்ந்தன; மீட்டு அவன்
கருணை செய்தால் -
இவ்வாறன்றி, அந்த அனுமன் அருள் புரிந்தால்;
பெறும் பதம் விளம்பல் ஆமோ ? - அடையக் கூடிய நற்பதவியை நம்மால்
சொல்ல முடியுமா ? (முடியாது) மிகப் பெரும் பதவி கிடைக்கும்.

     அனுமன்சினத்தால் தீண்டியே, பறவைகளுக்கு சுவர்க்கம் கிடைத்தது.
அருள் செய்தால் எவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கும் ? என்பது கருத்து.
சேடு - அழகு; இளமையும் ஆம்.                              (43)

சீதை தங்கி இருந்தமரம் மட்டும் அழியாது இருத்தல் 

5472. 

பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது
                            மென் சோலை,
விம்முறும்உள்ளத்து அன்னம் இருக்கும் அவ்
                            விருக்கம்ஒன்றும்,
மும் முறை உலகம்எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன்வைகும் ஆல் என, நின்றது
                            அம்மா !