ஓட - மலைகளும் இந்தப்பூவுலகும் வானமும் கடல்களும் தடுமாறும்படி ஓடியபோது; தன் தாதை ஒப்பான் - தன் தந்தையாகிய வாயு தேவனை ஒத்த வலிமையுடைய அனுமன்; நின்றது ஓர் சயித்தம் கண்டான் - அங்கு நிலை பெற்று விளங்கிய ஒரு ஓம மண்டபத்தைப் பார்த்து; ‘இதனை நீக்குவல்’ என்னா - இதை இவ்விடத்தை விட்டுப் பெயர்த் தெறிவேன்’ என்று; தன் தட கைகள் - தனது பெரிய கைகளை; நீட்டி பற்றினன் - நீட்டி அதனைப் பற்றிக் கொண்டான். சயித்தம் -சைத்தியம் என்னும் வடமொழியின் தமிழ்வடிவம் ஓமம் வேள்வி முதலியன புரியும் மண்டபம். ‘வானோங்கு சிமயத்து வாலொளி சயித்தம்’ (மணி மேகலை 28:131) (49) அந்த மண்டபத்தின்பெருமை 5478. | கண் கொளஅரிது; மீது கார் கொள அரிது; திண் கால் எண் கொள அரிது; இராவும் இருள் கொள அரிது; மாக விண் கொளநிவந்த மேரு வெள்குற, வெதும்பி உள்ளம் புண்கொள, உயர்ந்தது; இப் பார் பொறை கொள அரிது போலாம். |
கண் கொள அரிது- (அச்சயித்தம்) எவரும் தம் கண் பார்வை கொண்டு அதன் முழு உருவத்தையும் காண இயலாதது; கார் மீது கொள அரிது - மேகங்களும் எட்டி, அதன் மேற்கொள்ள முடியாத அளவு உயரமானது; திண்கால் எண் கொள அரிது - வலிய காற்றும் பற்றுவதற்கு எண்ணவும் அரியது; இராவும் இருள் கொள அரிது - இராப் பொழுதும் இருளினால் கொள்ள முடியாது; மாக விண்கொள நிவந்த மேரு - பெரிய ஆகாயத்தைத் தனது இடமாகக் கொள்ளும்படி மேலோங்கி எழுந்த மேருமலை கூட; வெதும்பி வெள்கு உற உள்ளம் புண் கொள உயர்ந்தது - வெட்கி, மனம் நொந்து புண் அடையும் படி உயர்ந்து விளங்கியது; இப் பார் பொறைகொள அரிது - இந்தப் பூமியும் அதன் பெருஞ் சுமையைத் தாங்குவது என்பது முடியாத செயல். |