அனுமன் விழுப்புண் படலும் வானவர்கள் மலர் மழை பொழிதலும் 5538. | எய்த,எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின் பொய்த,குத்தின, பொதுத்தன, துளைத்தன, போழ்ந்த, கொய்த, சுற்றன,பற்றின, குடைந்தன, பொலிந்த ஐயன் மல் பெரும்புயத்தன, புண் அளப்பு அரிதால். |
இகலில் -போரில்;எய்த எற்றின - (அவ்வரக்கர்கள்) அம்பு கொண்டு வீசியவைகளாலும், தாக்கியவைகளாலும்; எறிந்தன ஈர்த்தன - வீசி எறிந்தவைகளாலும் இழுத்தவைகளாலும்; பொய்த - சொரிந்தவைகளாலும்; குத்தின பொதுத்தன - குத்தியவைகளாலும் உள் அழுத்தியவைகளாலும்; துளைத்தன போழ்ந்த - துளைத்தனவற்றாலும் பிளந்தனவற்றாலும்; கொய்த சுற்றின - பறித்தனவாலும் சுற்றினவாலும்; பற்றின குடைந்தன - பிடித்தனவாலும் குடைந்தனவாலும்; பொலிந்த - விளங்கிய; ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிய - சிறப்புக்குரிய அனுமனது வலிமையில் சிறந்து விளங்கும் பெரிய தோள்களில் உண்டான விழுப்புண்கள் அளவிடமுடியாதனவாய் மிகுந்திருந்தன. வினை முற்றுகளைஅடுக்கிச் சந்த நயம் விளைதல் காண்க. வருணனையில் சலிப்பு ஏற்படாமைக்கு இதுவும் ஓர் உத்தி. (50) 5539. | கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில் கணனும், வேர்க்க, வெஞ்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் போர்க் குழாம்படி பூசலின், ஐயனைப் புகழ்வுற்று ஆர்க்கும்விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று அமரில். |
கார் கரும் தடங்கடல்களும் - மிகக் கரிய பெரியகடல்களும்; மழைமுகில் கணனும் - மழையைத் தருகின்ற மேகக் கூட்டங்களும்; வேர்க்க -மனம் புழுங்கும்படி (பின்னடையும் படி); வெம் செரு விளைத்து எழும் -கொடும் போரை உண்டாக்கி மேற் கொண்டு பற்களை உடைய அரக்கர்களின்போர்க்கூட்டங்களில்; படி பூசலின் - தோன்றுகின்ற ஒலியை விட;விண்ணவர் - தேவர்கள்; |