ஐயனைப் புகழ் வுற்று -பெரியோனான அனுமனைக் கொண்டாடி; ஆர்க்கும் அமலையே - (மகிழ்ச்சியால்) ஆரவாரிக்கின்ற ‘ஒலியே; அன்று அமரில் உயர்ந்தது - அன்றைய போரில் அதிகமாயிருந்தது. அனுமனதுபோர்த்திறனையும் வீரத்தையும் தேவர்கள் கண்டு புகழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியில் எழுந்த ஒலி, அரக்கர்களின் போர் ஒலியை விஞ்சி நின்றது என்க. (51) 5540. | மேவும் வெஞ் சினத்து அரக்கர்கள், முறை முறை, விசையால் ஏவும் பல் படை,எத்தனை கோடிகள் எனினும், தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த பூவும், புண்களும்,தெரிந்தில, மாருதி புயத்தில். |
மேவும் வெம்சினத்து அரக்கர்கள் - போருக்கு வந்த கொடிய கோபம் கொண்ட அரக்கர்கள்; முறை முறை விசையால் ஏவும் பல்படை - பல தடவை விசையுடன் தூண்டிய பல்வகை ஆயுதங்கள்; எத்தனை கோடிகள் எனினும் - மிகப் பலகோடிகளானாலும்; புண்களும் - அவற்றால் உண்டாகின்ற புண்களும்; தூவும் தேவரும் - இன்பத்தையே அனுபவிக்கின்ற தேவர்களும்; மகளிரும் முனிவரும் சொரிந்த பூவும் - அவரது மனைவிமார்களும் தேவ ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து பொழிந்த மலர்களும்; மாருதி புயத்தில் தெரிந்தில - அனுமனது தோளில் வேற்றுமை தெரியாதபடி ஒரு சேர விளங்கின. காண்பவர்களுக்குப் புண்களின் வடுக்களும் மலர்களும் வேற்றுமை தெரிந்தில. அனுமனுக்கு அமரர்கள் தூவிய பூக்களைப் போலவே, அரக்கர்கள் விட்ட படைகளால் ஏற்பட்ட புண்ணும் ஊறு செய்தில என்பதாம். (52) 5541. | பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின், உயர்க்கும்விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின்; அயர்த்துவீழ்ந்தனர், அழிந்தனர், அரக்கராய் உள்ளார்; வெயர்த்திலன்மிசை; உயிர்த்திலன்-நல் அற வீரன். |
|