நடுவில் சினம் கொண்டுதங்கியிருந்த சம்புமாலிக்கு உவமை ஆயிற்று. ‘வீரன், தானை சுற்றத் தேரில் போனான்’ என இயையும். (14) தோரண வாயில்மேல் ஏறி அனுமன் ஆர்த்தல் 5564. | நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்தானும், ‘வந்திலர் அரக்கர்’ என்னும் மனத்தினன், வழியை நோக்கி, சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து, நின்றான். |
நந்தன வனத்துள்நின்ற நாயகன் தூதன் தானும் - (அந்தச் சமயத்தில்) அசோக வனம் என்ற சிங்காரத் தோட்டத்துள் தனித்து நின்ற இராமபிரான் தூதனான அனுமனும்; அரக்கர் வந்திலர் என்னும் மனத் தினன்- மேலும் அரக்கர்கள் தன்னுடன் போரிட வரவில்லையே என்ற எண்ணுடையவனாகி; வழியை நோக்கி - அவர்கள் வரும் வழியை எதிர் நோக்கிக் கொண்டு; சந்திரன் முதல - சந்திரன் முதலவாகிய கிரகங்களும்; வான மீன் எலாம் தழுவ நின்ற - ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாமும் சூழ்ந்திருக்க விளங்கிய; இந்திர தனுவில் தோன்றும் - இந்திர வில் என்னும் வானவில்லைப் போன்று தோன்றிய; தோரணம் இவர்ந்து நின்றான் - அங்கிருந்த தோரண வாயில் மீது ஏறி நின்றான். இத் தோரண வாயில்,இராவணன், இந்திரனைப் போரில் புறங்கண்டபோது, அவனது அமராவதியில் இருந்ததைக் கவர்ந்து, அசோகவனத்தின் வாயிலாகக் கொண்டு வந்து வைத்ததாகும். (15) 5565. | கேழ் இருமணியும் பொன்னும், விசும்பு இருள் கிழித்து நீங்க, ஊழ் இருங்கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான், சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி, ஆழியின் நடுவண்தோன்றும் அருக்கனே அனையன் ஆனான். |
|