பக்கம் எண் :

558சுந்தர காண்டம்

     கேழ் இருமணியும் பொன்னும் - நல்ல நிறமுள்ள பெரிய
இரத்தினங்களும், பொன்னும்; விசும்பு இருள் கிழி்த்து நீங்க - வானில்
உள்ள இருளைப் பிளந்து நீங்கிட; ஊழ் இருங்கதிர்களோடும் - முறை
முறையே தோன்றுகின்ற (இரத்தினம், பொன்) மிக்க கிரணங்களோடும் கூடிய;
தோரணத்து உம்பர் மேலான் - அத்தோரண வாயிலின் மேல் ஏறி நின்ற
அனுமன்; சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிட - தன்னைச் சூழ்ந்த
பெருங் கிரணங்கள் யாவும் தோன்றி விளங்க; ஆழியின் நடுவண் தோன்றும்
-
கடலின் நடுவில் விளங்குகின்ற; சுடரும் சோதி அருக்கனே அனையன்
ஆனான் -
விளங்குகின்ற பேரொளியை உடைய சூரியனை ஒத்தவன்
ஆனான்.

     தோரணத்துஉம்பர் மேலான் (அனுமன்) அருக்கன் (சூரியன்) அனையன்
ஆனான். தோரணத்துக்குக் கடலும், மேலிடத்திருந்த அனுமனுக்குச் சூரியனும்
உவமையாயின. தோரணம் - தோரண வாயில். அனுமனுக்குக் கதிரவனை
முன்னும் (4768) உவமையாக்கினார்.                              (16)

5566.

செல்லொடுமேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத்
                                  தீர,
கல் அளைக்கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால,
கொல் இயல்அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம்,
                                  வீரன்
வில் என இடிக்க,விண்ணோர் நடுக்குற, வீரன்
                                  ஆர்த்தான்.

     மேகம் செல்லொடுசிந்த - மேகங்கள் இடியுடன் சிதறி விழவும்;
திரைக் கடல் சிலைப்பு தீர - அலைகளை உடைய கடல் தன் பேரொலி
அடங்கிப் போகவும்; கல் அளைக் கிடந்த நாகம் - மலைப் பொந்துகளில்
தங்கிக் கிடந்த பாம்புகள்; உயிரொடு விடமும் கால - தமது உயிரோடு
நஞ்சையும் ஒன்று சேர்ந்து உமிழவும்; கொல் இயல் அரக்கர் நெஞ்சில்
அச்சம் குடிபுக -
பிறரைக் கொல்லும் தன்மையுள்ள அரக்கர்களது மனத்தில்
பயம் வந்து புகுந்து நிலையாக நிற்கவும்; விண்ணோர் நடுக்கு உற -
தேவர்கள் நடுக்கம் அடையவும்; வீரன் வில் என இடிக்க - ரகுவீரனான
இராமபிரானது வில்லின் நாணொலி போல முழங்க; வீரன் ஆர்த்தான் -
சிறந்த வீரனான அனுமன் கர்ச்சனை செய்தான்.

     செல் - இடி;‘வான் முழக்குச் செல்’ (பரிபாடல் 13.44)         (17)