பண் மணிக்குல யானையின் - அழகு செய்யப்பட்ட உயர்ந்த இலக்கணங்கள் அமைந்த யானைகளின்; புடை தொறும் பரந்த ஒண் மணிக்குலம் - இருபக்கங்களிலும் பரவியுள்ள அழகிய மணிகளின் கூட்டம்; மழையிடை உரும் என ஒலிப்ப - மேகங்களில் தோன்றும் இடியோசை போன்று பேரொலி செய்ய; கண்மணிக்குலம் கனல் எனக் காந்துவ - கண்ணின் மணியாகிய விழிக்கூட்டம் கனலே போல ஒளி வீசின; கதுப்பின் தண் மணிக்குலம் - கன்னங்களில் அணியப் பெற்ற குளி்ர்ந்த மணியாகிய முத்துக்களின் கூட்டம்; மழை எழும் கதிர் என தழைப்ப - மேகத்தினின்று வெளிப்படும் சந்திரனே போன்று நிறைந்து விளங்கின. குலம் என்னும்சொல் முதலில் உயர்வு என்னும் பொருளிலும் பின்னே கூட்டம் என்ற பொருளிலும் வந்தது. மணி என்னும் சொல் முதலில் உயர்வு என்னும் பொருளில் வந்தது. (மணியான பிள்ளை என்னும் உலக வழக்கை எண்ணுக.) பின்னே இரத்தினம், முத்து என்ற பொருள்களில் வந்தது. (13) அரக்க வீரரைச்சுற்றத்தார் தடுத்து இரங்குதல் | 5614. | தொக்கதுஆம் படை, சுரி குழல் மடந்தையர், தொடிக் கை மக்கள், தாயர்,மற்று யாவரும் தடுத்தனர், மறுகி ‘ஒக்கஏகுதும், குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர் புக்கு மீண்டிலர்’என்று, அழுது இரங்கினர், புலம்பி. |
தொக்கது ஆம்படை - அவ்வாறு திரண்டதான படைவீரர்களை; சுரி குழல் மடந் தையர் - சுருண்ட கூந்தலை உடைய பெண்களும்; தொடிக்கை மக்கள் - வளையலை அணிந்த கைகளை உடைய மக்களும்; தாயர், மற்று யாவரும் - அவரது அன்னைமார்களும், மற்றைய சுற்றத்தினரும்; மறுகி, தடுத்தனர் - மனங்கலங்கி, (போர் செய்யச் செல்வதை முதலில்) தடுத்துச் சொல்லி; புக்கு ஒருவர் மீண்டிலர் - (தம் சொல்லைக் கேட்காமல் செல்லும் வீரர்களை நோக்கி) ‘இது வரை அந்தக் குரங்கோடு போருக்குச் சென்றவர் ஒருவரும் திரும்பினாரில்லை; குரங்கினுக்கு உயிர்தர - அந்தக் குரங்குக்கு உயிரைத் தர வேண்டுமானால்; ஒக்க ஏகுதும் - நாம் எல்லோரும் ஒருமிக்கச் செல்வோம் ! என்று - எனச் சொல்லி; அழுது புலம்பி இரங்கினர் - கோவென்று கதறி அழுது வருந்தினார்கள்; |