பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்593

பொருத அன்று இழந்தகோடு - மார்பினோடும் போர் புரிந்த அந்தக்
காலத்தில் (திசை யானைகள்) இழந்தவையான கொம்புகளை; அரிந்து இடும்
உறும் குழையர் -
அறுத்து அவற்றைக் கொண்டு செய்த அழகு பொருந்திய
காதணியை உடையவர்கள்; திசை நின்றவல் நெடும் களி யானையின் -
(அன்றியும்) எட்டுத் திக்குகளிலும் தோற்றுநின்ற வலிய பெரிய செருக்குற்ற
யானைகளின்; நெற்றி மின் திணிந்த அன ஓடையின் - நெற்றிகளில்
அணிந்த மின்னல்கள் நெருங்கி நின்றாற் போன்ற (மிக்க ஒளியை உடைய)
முகபடாத்தினால் இயன்ற; வீர பட்டத்தர் - வீரபட்டத்தை அணிந்தவர்.

     பஞ்சசேனாபதிகளின் வீரச் சிறப்பை விளக்குவது. குழை - காதணி;
யானையின் தந்தங்களால் காதணி செய்வது வீரம். ‘நாக மருப்பின்
இயன்றதோடும்’ (சீவக - 2440) திசை யானையின் நெற்றிப் பட்டத்தால் ஆன
வீரபட்டம் நெற்றியில் அணிவதும் வீரர் மரபு.                       (19)

கலி விருத்தம் 

5620.

நிதிநெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப்
பதியொடும்பெருந் திருப் பறித்த பண்டை நாள்,
‘விதி’ என,அன்னவன் வெந்நிட்டு ஓடவே,
பொதியொடும்வாரிய பொலன் கொள் பூணினார்.

     நெடு நிதிக்கிழவனை - (பஞ்ச சேனாபதிகள்)பெருஞ்
செல்வத்துக்குரியவனான குபேரனை; நெருக்கி - போரில் தாக்கி; நீள் நகர்
பதியொடும் -
நீண்ட நகரமாகிய அளகா புரியொடும்; பெருந் திருப் பறித்த
பண்டை நாள் -
அவன் பெருஞ் செல்வத்தையும் கவர்ந்து கொண்ட
முற்காலத்தில்; அன்னவன் - அந்தக் குபேரன் ! விதி என வெந்நிட்டு
ஓடவே -
‘நம்; பண்டை வினை’ என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடியவுடன்;
பொதியோடும் வாரிய -
சுமைகளாக வாரிக் கொண்ட; பொலன் கொள்
பூணினார் -
பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடையவர்கள். (20)

5621.

இந்திரன்இசை இழந்து ஏகுவான், இகல்
தந்தி முன்கடாவினன் முடுக, தாம் அதன்
மந்தர வால் அடிபிடித்து, ‘வல்லையேல்
உந்துதி, இனி’என, வலிந்த ஊற்றத்தார்.