பக்கம் எண் :

598சுந்தர காண்டம்

5629.

ஆயிடை,அனுமனும், அமரர்கோன் நகர்
வாயில்நின்றுஅவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச்
சேயொளித்தோரணத்து உம்பர், சேண் நெடு
மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான்.

     ஆ இடை -அப்பொழுது; அமரர் கோன் நகர் வாயில் நின்று -
தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின்
வாசலிலிருந்து; அவ்வழிக் கொணர்ந்து வைத்த - அவ்விடத்து
(அசோகவனம்) கொண்டு வந்து வைக்கப்பட்ட; மா சேய் ஒளித் தோரணத்து
உம்பர் -
மிக்க செந்நிறத்தை உடைய தோரணத்தின் மேலே; சேண் நெடு மீ
உயர் விசும்பையும் -
மிக நெடுந் தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும்;
கடக்க வீங்கினான் -
கடந்து செல்லுமாறு உருவத்தைப் பெரிதாக்கினான்;
                                                         (29)

5630.

வீங்கியவீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல்அரக்கரும், திருகினார் சினம்,
வாங்கியசிலையினர், வழங்கினார் படை;
ஏங்கியசங்குஇனம்;
இடித்த பேரியே !

     வீங்கிய வீரனை- (அவ்வாறு)  பெரு  வடிவு  கொண்ட  வீரனான
அனுமனை; வியந்து நோக்கிய - வியப்புடன் பார்த்த; தீங்கு இயல்
அரக்கரும் -
(பிறர்க்குத்) தீமை செய்தலையே தமக்கு இயல்பாகக் கொண்ட
அரக்கர்களும்; சினம் திருகினார் - கோபம் மிகுந்து; வாங்கிய சிலையினர்
-
வில்லை வளைத்து; படை வழங்கினார் - (அனுமன் மீது) அம்புகளைச்
செலுத்தினார்கள்; சங்கு இனம் ஏங்கிய - (அப்போது) சங்குகளின் கூட்டம்
ஒலி செய்தன; பேரி இடித்த - முரசங்கள் பேரொலி செய்தன.

     வீரர்கட்குஉற்சாகம் மிகுதற் பொருட்டு, சங்கம் முதலியன முழக்குதல்
மரபு.                                                     (30)

5631.

எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன
பொறிந்து எழுபடைக்கலம், அரக்கர் போக்கினார்;
செறிந்தனமயிர்ப்புறம்; தினவு தீர்வுறச்
சொறிந்தனர் எனஇருந்து, ஐயன் தூங்கினான்.