ஊக்கியபடைகளும் - அரக்கர்கள் தன்மீது செலுத்திய ஆயுதங்களும்; உருத்த வீரரும் - கோபித்து வந்த வீரர்களும்; தாக்கிய பரிகளும் - வந்து மோதிய குதிரைகளும்; தடுத்த தேர்களும் - தன்னைத் தடுத்து நின்ற தேர்களும்; மேக்கு உயர் கொடி உடை - மேலே உயர்ந்த கொடிகளைக் கொண்ட; மேக மாலை போல் நூக்கிய கரிகளும் - மேகங்களின் வரிசை போன்றனவுமான (தன்மீது) செலுத்தப்பட்ட யானைகளும்; புரள நூக்கினான் - (மண் மீது விழுந்து) புரண்டழியும் படி (அனுமன் எழுவைக் கொண்டு) கொன்றான். அனுமன், தன்கையில் ஏந்திய எழுவைக்கொண்டு (இரும்புத் தூண்) எதிரிகளின் ஆயுதம் முதலியவற்றை அழித்தது பற்றிக் கூறப்பட்டது. (33) | 5634. | வார் மதக்கரிகளின் கோடு வாங்கி, மாத் தேர் படப்புடைக்கும்; அத் தேரின் சில்லியால், வீரரை உருட்டும்;அவ் வீரர் வாளினால், தாருடைப்புரவியைத் துணியத் தாக்குமால். |
வார் மதக்கரிகளின் - நீண்ட மத யானைகளின்;கோடு வாங்கி - கொம்புகளை முறித்தெடுத்து; மாத்தேர் படப்புடைக்கும் - பெரிய தேர்கள் அழிய அடிப்பான்; அத்தேரின் சில்லியால் வீரரை உருட்டும் - அழிந்த தேர்களின் சக்கரங்களைக் கொண்டு, போர் வீரர்களை உருண்டு விழச் செய்வான்; அவ்வீரர் வாளினால் - உருண்டு வீழ்ந்த அரக்கவீரரது கைவாள்களைக் கொண்டு; தார் உடைப் புரவியை துணியத்தாக்கும் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகளைத் துணிபட்டு விழும்படி வெட்டுவான். அனுமன், தான்அழித்த பொருள்களையே ஆயுதங்களாகக் கொண்டு அப்படைகளைக் கொன்றான் என்பதாம். அனுமன் இதேபோலப் போர் செய்தை 5579 ஆம் பாடலிலும், அடுத்த 5635ஆம் பாடலிலும் காணலாம். (34) | 5635. | இரண்டுதேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு இரண்டு மால்யானை பட்டு உருள, எற்றுமால்; இரண்டு மால்யானை கை இரண்டின் ஏந்தி, வேறு இரண்டு பாலினும்வரும் பரியை எற்றுமால். |
|