பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்607

பரவிற்று; வலம் தருதோளவர் ஐவரும் வந்தார் - (அப்போது) வலியைத்
தரும் தோள்களை உடைய பஞ்ச சேனாபதிகளும் போர் புரிய எதிர்த்து
வந்தனர்.

     சேனைகளின்அழிவுக்குப் பிறகு, படைத்தலைவர் ஐவரும் அனுமனை
எதிர்க்க வந்தனர் என்றவாறு.                                (47)

5648.

ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் இழுக்க,
தேர்த் துணை ஆழிஅழுந்தினர், சென்றார்;
ஆர்த்தனர்;ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர்;அஞ்சனை தோன்றலும் நின்றான்.

     ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் - (பிணக்குவியல்களை)இழுத்துக்
கொண்டு செல்கின்ற இரத்த வெள்ளத்தினிடையே உள்ள மணல் திட்டுகள்;
இழுக்க -
உள்ளே இழுப்பதனால்; தேர்த்துணை ஆழி அழுந்தினர்
சென்றார் -
தம் தேர்களின் சக்கரங்களும் புதையவும் அரிதின் சென்ற பஞ்ச
சேனாபதிகள்; ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர் - ஆயிரக்கணக்கான
அம்புகளால் (அனுமன் உடலை) மூடி மறைத்தனர்; அஞ்சனை தோன்றலும்
நின்றான் -
அஞ்சனா தேவியின் மகனாகிய அனுமனும் அம்புமாரியுள்
அஞ்சாது நின்றான்.                                          (48)

5649.

எய்த கடுங்கணை யாவையும், எய்தா
நொய்துஅகலும்படி, கைகளின் நூறா,
பொய்து அகடுஒன்று பொருந்தி, நெடுந் தேர்
செய்த கடும்பொறி ஒன்று, சிதைத்தான்.

     எய்த கடும்கணையாவையும் எய்தா - (அந்தப் பஞ்சசேனாபதிகள்)
எய்த கொடிய அம்புகள் எல்லாம் தன்னை வந்து அடையாமல்; நொய்து
அகலும்படி கைகளின் நூறா -
எளிதில் ஒழிந்து போம்படி (தன்)
கைகளினால் தூளாக்கிவிட்டு; நெடுந்தேர் - (பிறகு, பஞ்ச சேனாபதிகளுள்
ஒருவனது) பெரிய தேரிலே; பொய்து - துளைக்கப்பட்டு; அகடு ஒன்று
பொருந்தி செய்து -
நடுவில் நாட்டப்பட்டதாகிப் பொருந்தி  செய்திருந்த;
கடும் பொறி ஒன்று சிதைத்தான் -
விரைந்து செல்வதற்குரிய இயந்திரம்
ஒன்றை அழித்தான்.