பக்கம் எண் :

608சுந்தர காண்டம்

     அந்தப் பஞ்சசேனாபதிகளை அழிக்கக் கருதிய அனுமன், அவர்களுள்
ஒருவனது தேரின் விசையந்திரத்தைச் சிதைத்தான் என்பதாம்.        (49)

5650.

உற்று உறுதேர் சிதையாமுன் உயர்ந்தான்,
முற்றின வீரனை,வானில் முனிந்தான்;
பொன் திரள்நீள் எழு ஒன்று பொறுத்தான்,
எற்றினன்; அஃதுஅவன் வில்லினில் ஏற்றான்.

     உற்று உறு தேர்சிதையா முன் - (பொறி) பொருந்தியஅத்தேர்
அழிவதற்கு முன்னமே; உயர்ந்தான் - அவரக்கன் அத்தேரினின்றும் உயர்ந்து
எழுந்தான்; முற்றின வீரனை - அவன் அங்கும் தன்னை மேலெழாதபடி
முற்றிக் கொண்ட வீரனாகிய அனுமனை; வானில் முனிந்தான் -
ஆகாயத்திலிருந்தபடியே எதிர்த்தான்; பொன்திரள் நீள் மழு ஒன்று
பொறுத்தான் -
(அவனை) அனுமன், கரும் பொன்னால் திரட்டப்பட்ட நீண்ட
மழு ஒன்றை தாங்கியவனாய்; எற்றினன் - தாக்கியடித்தான்; அஃது - அந்த
இரும்புத் தூணை; அவன் வில்லினின் ஏற்றான் - அந்த அரக்கன் தனது
வில்லினால் தன் மேல் விழாதபடி தாங்கித் தடுத்தான்.               (50)

5651.

முறிந்ததுமூரி வில்; அம் முறியேகொடு
எறிந்த அரக்கன், ஓர் வெற்பை எடுத்தான்;
அறிந்தமனத்தவன், அவ் எழுவே கொடு
எறிந்த அரக்கனைஇன் உயிர் உண்டான்.

     மூரிவில்முறிந்தது - (அந்த அரக்கனுடைய)வலிய வில் முறிந்து
போயிற்று; அம் முறியே கொடு - அந்த வில்லின் முறிந்த துண்டையே
கையில் கொண்டு; எறிந்த அரக்கன் - அனுமன் மீது வீசி எறிந்த அந்த
அரக்கன்; ஓர் வெற்பை எடுத்தான் - மீண்டும் ஒரு மலையை அனுமன் மீது
எறியத் தூக்கினான்; அறிந்த மனத்தவன் - அரக்கனின் கருத்தை அறிந்த
மனத்தவனாகிய அந்த அனுமன்; அவ் எழுவே கொடு - (தனது கையில்
கொண்டிருந்த) அந்த இரும்புத் தூணைக் கொண்டே; எறிந்த அரக்கனை -
தன்மீது வில் முறிகொண்டு எறிந்த அரக்கனுடைய; இன் உயிர் உண்டான் -
இனிய உயிரை அழித்தான்.